ஸாஹிரா கல்லூரியுடன் நடைபெற்ற ரக்பி போட்டியில், அவிஷ்க லீவின் இறுதி நேர பெனால்டியின் மூலம் 32-29 என்ற புள்ளிகளின் அடிப்படையில் விறுவிறுப்பான போட்டியை வெஸ்லி கல்லூரியானது வென்றது.
லொங்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சென்ற வாரம் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியை இலகுவாக வென்ற நிலையில் ஸாஹிரா கல்லூரி இப்போட்டியில் வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கியது. மறுமுனையில் வெஸ்லி கல்லூரியானது விஞ்ஞான கல்லூரியை இலகுவாக வென்ற நிலையில் நம்பிக்கையுடன் களமிறங்கியது.
போட்டியின் ஆரம்பத்திலிந்து இரு அணிகளும் பல தவறுகளை செய்து எதிர் அணிக்கு பெனால்டி வாய்ப்புகளை வழங்கினர். அவ்வாறு முதலில் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட வெஸ்லி கல்லூரி அணியின் அவிஷ்க லீ தமது அணிக்காக 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். சிறிது நேரத்தின் பின்னர், செயிட் சிங்ஹவன்சவும் கிடைத்த பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்தி ஸாஹிரா கல்லூரி அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (வெஸ்லி கல்லூரி 03 – ஸாஹிரா கல்லூரி 03)
எம்.எஸ்.சுவீட்டோவின் மூலம் பந்தை பெற்றுக்கொண்ட யுஸ்ரான் லந்த்ரா ஸாஹிரா கல்லூரி அணிக்கு முதல் ட்ரை வைத்தார். எனினும் செயிட் சிங்ஹவன்ச கொன்வெர்சனை தவறவிட்டார். (வெஸ்லி கல்லூரி 03 – ஸாஹிரா கல்லூரி 08)
மீண்டும் ஒருமுறை தனது திறமையை வெளிக்காட்டிய யுஸ்ரான் லந்த்ரா, ஸாஹிரா கல்லூரி சார்பாக இரண்டாவது ட்ரையையும் வைத்து அசத்தினார். இம்முறை பந்தை பெற்றுக்கொண்ட யுஸ்ரான் தனது வேகத்தின் மூலம் கடந்து சென்று கம்பத்தின் அடியில் ட்ரை வைத்தார். சிங்ஹவன்ச இலகுவான கொன்வெர்சனை தவறவிடவில்லை. (வெஸ்லி கல்லூரி 03 – ஸாஹிரா கல்லூரி 15)
தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. வெஸ்லி கல்லூரியானது பாரிய முயற்சியின் பின்னர் டயஸ் மூலமாக முதல் ட்ரையினை பெற்றுக்கொண்டது. லைன் அவுட் மூலம் பந்தை பெற்றுகொண்ட வெஸ்லி கல்லூரியானது ரோலிங் மோல் மூலம் ட்ரை வைத்தது. அவிஷ்க லீ கொன்வெர்சனை வெற்றிகரமாக உதைத்தார். (வெஸ்லி கல்லூரி 10 – ஸாஹிரா கல்லூரி 15)
ஸாஹிரா கல்லூரியானது 5 புள்ளிகள் முன்னிலை பெற்ற நிலையில் முதற் பாதி நிறைவடைந்தது.
முதல் பாதி : வெஸ்லி கல்லூரி 10 – ஸாஹிரா கல்லூரி 15
இரண்டாம் பாதி ஆரம்பித்து 5 நிமிடங்களின் பின்னர், வெஸ்லி கல்லூரி அணியின் ஸ்க்ரம் ஹாப் நிலை வீரரின் திறமையான விளையாட்டின் மூலம் பந்தை பெற்றுக்கொண்ட அவிஷ்க லீ வெஸ்லி அணிக்கு ட்ரை வைத்தார். பின்னர் அவரே கொன்வெர்சனை சிறப்பாக உதைத்து, வெஸ்லி கல்லூரி அணிக்கு முன்னிலையை பெற்றுக்கொடுத்தார். (வெஸ்லி கல்லூரி 17- ஸாஹிரா கல்லூரி 15)
மீண்டும் ஒரு முறை தனது வேகத்தை நிரூபித்த லந்த்ரா, தனது ஹட்ரிக் ட்ரையை வைத்து அசத்தினார். இம்முறை மேல் உதையின் மூலம் பந்தை பெற்றுக்கொண்ட லந்த்ரா, எதிரணி வீரர்களுக்கு தன்னை பிடிப்பதற்கு சிறிதளவும் இடம் கொடுக்காமல் ட்ரை கோட்டை கடந்தார். சிங்ஹவன்ச கொன்வெர்சனை வெற்றிகரமாக உதைத்தார். (வெஸ்லி கல்லூரி 17- ஸாஹிரா கல்லூரி 22)
அவிஷ்க லீ தமக்கு கிடைத்த பெனால்டி உதையை தவறவிட்டார். சிறிது நேரத்தின் பின்னர், ஸாஹிரா கல்லூரி வீரர் நொக் ஒன் செய்த பந்தினை பெற்றுக்கொண்ட அவந்த லீ, ஸாஹிரா வீரர்களை சுற்றி ஓடி சென்று, தனது திறமையின் மூலமாக ட்ரை வைத்து அசத்தினார். அவிஷ்க இம்முறை உதையை தவறவிடவில்லை. (வெஸ்லி கல்லூரி 24- ஸாஹிரா கல்லூரி 22)
வெஸ்லி கல்லூரியின் அபோன்சோ மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்து வெஸ்லி அணியின் முன்னிலையை அதிகரித்துக் கொடுத்தார். எனினும் அவிஷ்க உதையை தவறவிட்டதன் மூலம் ஸாஹிரா கல்லூரி 7 புள்ளிகள் மாத்திரமே பின்தள்ளி காணப்பட்டது. (வெஸ்லி கல்லூரி 29- ஸாஹிரா கல்லூரி 22)
போட்டியை விட்டுக்கொடுக்க விரும்பாத ஸாஹிரா கல்லூரியானது கடினமாக விளையாடியது. இதற்கு பலனாக ஸாஹிரா கல்லூரியின் ராசிக் தனது பலத்தின் மூலம் எதிரணி வீரர்களை வீழ்த்தி ட்ரை வைத்தார். சிங்ஹவங்சவின் வெற்றிகரமான கொன்வெர்சன் உதையுடன் மீண்டும் ஒரு முறை புள்ளிகள் சமநிலைபெற்றது. (வெஸ்லி கல்லூரி 29- ஸாஹிரா கல்லூரி 29)
போட்டியின் இறுதி நிமிடங்களில் வெஸ்லி கல்லூரி அணிக்கு மைதானத்தின் ஓரத்தில் பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வெஸ்லி கல்லூரியானது அவிஷ்கவின் உதவியுடன் 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. (வெஸ்லி கல்லூரி 32- ஸாஹிரா கல்லூரி 29)
வெறும் 3 புள்ளிகள் பின் தங்கிய நிலையில், எதிரணியின் கோட்டைக்குள் ஸாஹிரா கல்லூரி அணிக்கும் 3 பெனால்டி வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றன. எனினும் சிங்ஹவன்ச முதலாவது மற்றும் மூன்றாவது பெனால்டி உதைய தவறவிட்டார். இரண்டாவது பெனால்டி வாய்ப்பில் ஸாஹிரா கல்லூரியானது பந்தை விரைவாக எடுத்து ஓடிய பொழுதும், அதன் மூலம் பலனை பெற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் மீண்டும் ஒரு முறை சிறப்பான ஆட்டத்தின் பின்னர் ஸாஹிரா கல்லூரியானது சிறு புள்ளி வித்தியாசத்தில் போட்டியினை பறிகொடுத்தது.
முழு நேரம் : வெஸ்லி கல்லூரி 32 – ஸாஹிரா கல்லூரி 29
ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – அவிஷ்க லீ (வெஸ்லி கல்லூரி)
புள்ளிகள் பெற்றோர்
வெஸ்லி கல்லூரி – டயஸ் 1T, அவிஷ்க லீ 1T 3C 2P, அபோன்சோ 1T, அவந்த லீ 1T
ஸாஹிரா கல்லூரி – யுஸ்ரான் லந்தரா 3T, ராசிக் 1T, செயிட் சிங்ஹவன்ச 3C 1P