தற்பொழுது நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் மூன்று போட்டிகள் நடைபெற்றன. குறித்த ஆட்டங்களில் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது.
வத்தளை புனித அந்தோனியர் கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி
வத்தளை புனித அந்தோனியர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற முதல் சுற்றுக்காக A குழுவில் அங்கம் வகிக்கும் இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அந்தோனியர் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அந்த வகையில் களமிறங்கிய புனித அந்தோனியர் கல்லூரி எறங்க மதுஷானின் 59 ஓட்டங்களின் உதவியுடன் 66.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டது. அதே நேரம் எதிரணியின் ஓட்டங்களை மட்டுப்படுத்திய அசெல் குலதுங்க 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய நாலந்த கல்லூரி இன்றைய ஆட்ட நேரம் நிறைவின்போது 1 விக்கெட் இழப்பிற்கு 27 ஓட்டங்களை பெற்றிருந்தது. நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
புனித அந்தோனியர் கல்லூரி: 191 (66.5) – எறங்க மதுஷான் 59, அவிஷ்க தறிந்து 33, ருக்ஷன் ரொட்ரிகோ 22, அசெல் குலதுங்க 4/34, லக்ஷித ரசன்ஜன 2/38, தசுன் செனவிரத்ன 2/30
நாலந்த கல்லூரி : 27/1 (9)
லும்பினி கல்லூரி எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொறட்டுவ
கொழும்பு BRC மைதானத்தில் நடந்த, B குழுவில் அங்கம் வகிக்கும் இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி, லும்பினி கல்லூரியின் தனுக்க தாபரே மற்றும் விமுக்தி குலதுங்க ஆகியோரின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்டு 58.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 94 ஓட்டங்களை மட்டுமே பெற்று, நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கிறது.
அதிகபட்ச ஓட்டங்களாக அவிந்து பெர்னாண்டோ 27 ஓட்டங்களை பதிவு செய்த போதிலும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து சென்றனர். பந்து வீச்சில் எதிரணியை அச்சுறுத்திய தனுக்க தாபரே மற்றும் விமுக்தி குலதுங்க முறையே 3 மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்
போட்டியின் சுருக்கம்
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி : 94/9 (58.2) – அவிந்து பெர்னாண்டோ 27, விமுக்தி குலதுங்க 4/31, தனுக்க தாபரே 3/17,
டி.எஸ் சேனநாயக்க கல்லூரி எதிர் மொறட்டுவ வித்தியாலயம்
தொடரில் C குழுவில் இடம்பெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி மொறட்டுவ வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மொறட்டுவ வித்தியாலயம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அந்த வகையில் களமிறங்கிய டி.எஸ் சேனநாயக்க கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின்போது மூன்று விக்கெட் இழப்பிற்கு 1௦3 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நாளை போட்டியின் இறுதி நாளாகும்
போட்டியின் சுருக்கம்
டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு : 103/3 (31)