தோல்வியுறும் நிலையிலிருந்த தமது அணியை மீண்டெடுத்து போனஸ் புள்ளிகளுக்கும் வளிவகுத்த கலன விஜேயசிறியின் அசத்தல் ஆட்டத்தினால், பாடசாலை அணிகளுக்கு இடையிலான பிரிவு l இன் 19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ணத்தின் சம்பியன் பட்டத்தை ஆனந்த கல்லூரி சுவீகரித்தது.
அவிந்து, சந்துனின் சிறப்பான ஆட்டத்தினால் ரிச்மண்ட் கல்லூரி வலுவான நிலையில்
இரண்டு நாட்களைக் கொண்ட இந்த கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியின் முதலாம் நாளான நேற்றைய ஆட்டநேர நிறைவின்போது, அவிந்து தீக்ஷன மற்றும் சந்துன் மென்டிஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் காலி ரிச்மண்ட் கல்லூரி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 307 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
அந்த வகையில், இரண்டாம் நாளான இன்று துடுப்பாடுவற்காக களமிறங்கிய கொழும்பு ஆனந்த கல்லூரி அணி, முதலிரண்டு விக்கெட்டுகளையும் வெறும் 14 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாறியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகிய கவிந்து கிமான் மற்றும் கனிஷ்க ரந்திலக்ககே ஆகியோர் முறையே 1 மற்றும் 11 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
எனினும் மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய கலன விஜேயசிறி மற்றும் அசேல் சிகர ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, 105 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்தினர்.
சிறப்பாகத் துடுப்பாடிய அசேல் சிகர 6 பௌண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உள்ளடங்கலாக 54 ஓட்டங்களைப் பெற்று ரிச்மண்ட் கல்லூரியை அச்சுறுத்தினார். எனினும் அவர், திலங்க உதேஷனவின் அபார பந்து வீச்சில் ஆட்டமிழந்து சென்றார்.
அதனையடுத்து களமிறங்கிய சம்மு அஷான் மற்றும் கே. நிர்மால் ஆகியோருக்கு ஓட்டங்களை பெற்றுக்கொள்ள பந்து வீச்சாளர் சுபுன் மெண்டிஸ் இடமளிக்கவில்லை. இருவரையும் முறையே 0 மற்றும் 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து ஆனந்த கல்லூரிக்கு பெரும் அழுத்தம் கொடுத்தார்.
பின்னர், 7ஆவது விக்கெட்டுக்காக கவிஷ்க அஞ்சுல நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்டங்களை உயர்த்த முயசித்த போதிலும், 35 ஓட்டங்ககளுக்கு அவிந்து தீக்ஷனவின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக அவ்வணி 58.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை மாத்திரமே பதிவு செய்திருந்தது. தொடர்ந்து துடுப்பாட வந்த லஹிரு ஹிரண்ய, மீண்டும் அவிந்து தீக்ஷனவின் பந்து வீச்சில் ஒரு ஓட்டத்துடன் வெளியேற, ஆனந்த கல்லூரி அணி 2 விக்கெட்டுகள் மாத்திரமே எஞ்சிய நிலையில் 120 ஓட்டங்களால் பின்னிலையுற்று தோல்வியுறும் நிலையில் காணப்பட்டது.
இவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய சுபுன் வராகொட, கலன விஜேயசிறியுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இரண்டாம் நாள் நிறைவடையும் வரை அட்டமிழக்காமல் மெதுவாக ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அதேவேளை, கலன விஜேயசிறி தனது சதத்தையும் பெற்றுக்கொண்டார்.
லங்கஷைர் அணிக்காக ஒப்பந்தமாகும் மஹேல ஜயவர்தன
இவ்விருவரும் ஆட்டம் நிறைவுறும் வரை துடுப்பாடி தோல்வியை தவிர்த்துக் கொண்ட அதேவேளை, தங்களுக்கிடையே 86 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். சிறப்பாக துடுப்பாடிய கலன விஜேயசிறி 286 பந்துகளை எதிர்கொண்டு 18 பௌண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 130 ஓட்டங்களைப் பதிவு செய்ததோடு அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.
அதேவேளை, அவருடன் துடுப்பாடிய சுபுன் வராகொட தனது விக்கெட்டைப் பாதுகாத்துக்கொண்டு மொத்தமாக 110 பந்துகளை எதிர்கொண்டு 2 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 27 ஓட்டங்களுடன் களத்திலிருந்தார்.
பந்து வீச்சில் திலங்க உதேஷன, அவிந்து தீஷன மற்றும் சுபுன் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர் .
போட்டியின் சுருக்கம்
ரிச்மண்ட் கல்லூரி: 307/8 (95 ஓவர்கள்) – அவிந்து தீக்ஷன 80, சந்துன் மென்டிஸ் 64*, தவீஷ அபிஷேக் 46, துவீன் குலசுரிய 36*, கசுன் தாரக்க 25, சுபுன் வராகொட 4/91, அசெல் சிகர 2/80
ஆனந்த கல்லூரி: கலன விஜேயசிறி 130, அசேல் சிகர 54, கவிஷ்க அஞ்சுல 32, சுபுன் வராகோட 27, திலங்க உதேஷன 32/2, அவிந்து தீஷன 54/2, சுபுன் மெண்டிஸ் 107/2