சிங்கபூரிடம் தோல்வியடைந்த இலங்கை வலைப்பந்தாட்ட அணி

Netball World Cup 2023

315

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் வலைப்பந்தாட்ட உலகக்கிண்ணத் தொடரின் கடைசி 4 இடங்களை தீர்மானிக்கும் குழு E இற்கான போட்டியில் சிங்கபூரிடம் 55-52 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை தோல்வியடைந்தது. 

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி உள்ளடங்களாக தொடர்ச்சியாக சவால் கொடுத்துவரும் சிங்கபூர் அணிக்கு எதிராக 8 போட்டிகளின் பின்னர் இலங்கை அணி தோல்வியடையும் முதல் சந்தர்ப்பமாக இது மாறியுள்ளது. 

வேல்ஸ் அணியிடம் போராடி வீழ்ந்த இலங்கை!

ஆட்டத்தின் முதல் கால்பகுதியில் இலங்கை அணி வெளிப்படுத்திய பிரகாசிப்பு போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியிருந்தது. முதல் கால்பகுதியை சிங்கபூர் அணி 19-10 என்ற 9 புள்ளிகள் முன்னிலையுடன் கைப்பற்றியது. 

தொடர்ந்து போட்டியை சமப்படுத்தும் நோக்கில் களமிறங்கி விளையாடிய இலங்கை அணி சிங்கபூர் அணிக்கு சவால் கொடுத்தது. இரண்டாவது கால்பகுதியை 17-7 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றிய இலங்கை அணி 27-26 என முதல்பாதியில் முன்னிலைப்பெற்றது. 

மூன்றாவது கால் பகுதியின் மத்திய பகுதிவரை 35-32 என இலங்கை அணி முன்னிலையை தக்கவைத்திருந்த போதும், தொடர்ச்சியாக 5 புள்ளிகளை பெற்றுக்கொண்டு முன்னேறிய சிங்கபூர் அணி 42-40 என 2 புள்ளிகளால் முன்னிலையை பெற்றது. 

இதனையடுத்து வெற்றியை உறுதிசெய்யும் இறுதி கால்பகுதியில் தர்ஜினி சிவலிங்கத்தின் வருகையுடன் 44-44 என இலங்கை அணி ஒரு கட்டத்தில் புள்ளிகளை சமப்படுத்தியது. எனினும் இறுதியில் 3 புள்ளிகளை தொடர்ச்சியாக பெற்று முன்னேறிய சிங்கபூர் அணி 55-52 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை தக்கவைத்துக்கொண்டது. 

இலங்கை அணிக்காக தன்னுடைய சராசரியிலும் குறைவான சதீவீதத்தை கொடுத்த தர்ஜினி சிவலிங்கம் 27 முயற்சிகளில் 22 புள்ளிகளை பெற்றுக்கொடுக்க, திசாலா அல்கம 31 முயற்சிகளில் 28 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். 

அதேவேளை இலங்கை அணியானது தங்களுடைய அடுத்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<