தீர்மானம்மிக்க அரையிறுதிப் போட்டியில் இலங்கையை வென்றது சிங்கப்பூர்

283
Singapore crush Sri Lanka in Asian Youth Netball semi-final

கொரியாவின் ஜியோனுவில் இடம்பெற்றுவரும் 10ஆவது  ஆசிய சம்பியன்ஷிப் வலைப்பந்தாட்ட தொடரின் அரையிறுதிப்  போட்டியில் இலங்கை அணியை 58-32 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டிய சிங்கப்பூர் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

ஹொங் கொங் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தெரிவாகிய இலங்கை

இந்த சம்பியன்ஷிப் தொடரின் ஆரம்பப் போட்டியில் தாய்லாந்து அணியிடம் 53-48 என்ற ரீதியில் தோல்வியுற்றிருந்தாலும், ஏனைய போட்டிகளில் பாகிஸ்தானுடன் 93-6 எனவும், மாலைதீவுகளுடன் 86-14 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் இலங்கை வெற்றியீட்டியது. அத்துடன், வலிமைமிக்க ஹொங் கொங் அணியுடனான போட்டியில் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் 60-45 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியை பதிவு செய்து மீண்டெழுந்தது.

அதுபோன்று மற்றைய குழுவில் இந்தியாவுடனான போட்டியில், இந்தியா பங்கு பெறாமையினால் குறித்த போட்டிக்கான புள்ளிகள் சிங்கப்பூர் அணிக்கு வழங்கப்பட்டிருந்தது. அதனையடுத்து நடைபெற்ற தென் கொரிய அணியுடனான போட்டியில் சிங்கப்பூர் 108-6 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலகு வெற்றியை பதிவு செய்தது.

அதன் பின்னர், 2015ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தை கைப்பற்றியிருந்த மலேசிய அணியுடனான விறுவிறுப்பான போட்டியில், 53-50 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. குழு மட்டப் போட்டிகளில் இறுதியாக நடைபெற்ற சைனீஸ் தாய்ப்பே அணியுடனான போட்டியில் 79-15 என்ற புள்ளிகளுடன் இலகுவாக வெற்றியீட்டிய சிங்கப்பூர் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

அந்த வகையில் இலங்கை அணியுடனான அரையிறுதிப் போட்டியில் அவ்வணி அதிரடியாக விளையாடியது. முதல் காலிறுதி நேரத்தில் 16-8 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றது. இரண்டாம் காலிறுதி நேரத்தில் இலங்கை அணி கடுமையாக போராடிய போதிலும், 9-11 என்ற இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் முடிவுற்றது. அந்த வகையில் முதல் பாதி நேரத்தில் சிங்கப்பூர் அணி 27-17 என்ற புள்ளிகள் அடிப்படையில் 10 புள்ளிகளால் முன்னிலை பெற்றிருந்தது.

அரையிறுதிப் போட்டியில் மூன்றாம் காலிறுதி நேரத்திலும் 14-6 என்ற கணக்கில் புள்ளிகளை பெற்று மேலும் 18 புள்ளிகளால் முன்னிலை வகித்து முற்று முழுதாக சிங்கப்பூர் அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதி காலிறுதி நேரத்தில் 17-9 என்ற புள்ளிகள் அடிப்படையில் மீண்டும் முன்னியை பெற்ற அவ்வணி, போட்டியின் நிறைவில் 58-32 என்ற புள்ளிகள் அடிப்படையில் 20 மேலதிக புள்ளிகளால் இலங்கை அணியை வெற்றியீட்டியது.

போட்டித் தொடர் முழுவதும் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த இலங்கை அணி, அரையிறுதிப் போட்டியில்  அதிகளவான ஷூட்டிங் வாய்ப்புகளை தவற விட்டமையே தோல்விக்கு காரணமாக அமைந்தது. போட்டித் தொடரில் அதிகளவான புள்ளிகளை பதிவு செய்திருந்த கவீனா ராஜபக்ஷ இந்தப் போட்டியில் 33 ஷூட்டிங் முயறசிகளில் 24 புள்ளிகளை பெற்றிருந்தார். அத்துடன், ரஷ்மி பெரேரா 15 ஷூட்டிங் முயற்சிகளில் வெறும் 8 புள்ளிகளை மாத்திரமே பெற்றிருந்தார்.  

இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றிருந்த சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை அணியிடம் 69-56 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிங்கப்பூர் அணி தோல்வியின்றிருந்தமை நினைவுகூறத்தக்கது.

அதேநேரம், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மோதிக்கொண்ட மலேசியா மற்றும் ஹொங் கொங் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் மலேசிய அணி 70-40 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதன்படி, மே 13ஆம் திகதி மலேசியா மற்றும் சிங்கப்பூர் அணிகள் இறுதி போட்டியில் மோதவுள்ளன. அத்துடன், மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை மற்றும் ஹொங் கொங் அணிகள் மோதவுள்ளன.