31ஆவது ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் இருந்து டென்னிஸ் நட்சத்திரங்களான கனடா வீரர் மிலோஸ் ரொவ்னிக், மற்றும் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹலெப் ஆகியோர் ‘சிகா’ வைரஸ் தங்களைத் தாக்கி விடுமோ என்ற பீதியில் விலகியுள்ளனர்.
அண்மையில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தவரான 7ஆம் நிலை வீரர் மிலோஸ் ரொவ்னிக் கூறுகையில், “கனத்த இதயத்துடன் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக அறிவிக்கிறேன். எனது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களிடம் தீவிர ஆலோசனை நடத்தினேன். குறிப்பாக அங்கு பரவும்கா சிகா வைரஸ் பாதிப்பு குறித்து விவாதித்து இந்த முடிவுக்கு வந்தேன்” என்றார்.
5ஆம் நிலை வீராங்கனையான 24 வயதான சிமோனா ஹலெப் கூறும் போது, “அபாயகரமான சிகா வைரஸ் காரணமாக ஒலிம்பிக்கில் இருந்து விலகி இருக்கிறேன். உடல்ஆரோக்கியம் விஷயத்தில் நான் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை. அதுவும் நான் ஒரு வீராங்கனை. எனது குடும்பத்தினர் கவலைப்படுகிறார்கள். எனக்கு குடும்பமே மிகவும் முக்கியம்” என்றார்.
இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான தரவரிசையில் 6ஆவது இடம் வகிக்கும் விக்டோரியா அஸரென்காவும் (பெலாரஸ்) இந்த ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளமாட்டார். காதலனுடன் நெருங்கிப் பழகிய அஸரென்கா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் இந்த ஆண்டு முழுவதும் எந்த போட்டியிலும் விளையாடமாட்டேன் என்று அறிவித்துள்ளார். “குழந்தை பெற்ற பிறகு ஓய்வு பெறமாட்டேன். மீண்டும் டென்னிஸ் களம் திரும்புவேன். இப்படி சாதித்த வீராங்கனைகள் பலர் இருக்கிறார்கள். அவர்களது வழியில் நானும் உயரிய நிலையை எட்ட வேண்டும் என்பதே எனது நோக்கம்” என்றும் அஸரென்கா குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் ஜோகோவிச் (செர்பியா), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோர் ஒலிம்பிக் டென்னிசில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.