இலங்கை – பங்களாதேஷ் அணிகள் விளையாடும் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் இன்று (04) ஆரம்பமாகவிருக்கும் நிலையில் இந்த சுற்றுப்பயணம் குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான கிறிஸ் சில்வர்வூட் கருத்து வெளியிட்டுள்ளார்.
>>லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் (LSG) உடன் இணையும் லேன்ஸ் குளூஸ்னர்<<
பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கே மூவகை கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் ஆடுகின்றது. இந்த கிரிக்கெட் தொடர்களில் முதற்கட்டமாக T20I தொடர் நடைபெறுகின்றது.
இந்த T20I தொடரில் வனிந்து ஹஸரங்க இலங்கையின் அணித்தலைவராக நியமனம் செய்யப்பட்ட போதிலும் அவருக்கு இருக்கும் போட்டித்தடை காரணமாக தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை இழந்திருக்கின்றார். மறுமுனையில் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான பெதும் நிஸ்ஸங்க தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியிருக்கின்றார்.
இவ்வாறாக முன்னணி வீரர்கள் இருவரினை இழந்து இலங்கை காணப்படும் நிலையில் இந்த வீரர்கள் இழப்பினை தான் புதிய வாய்ப்பாக கருதுவதாக கிறிஸ் சில்வர்வூட் குறிப்பிட்டிருக்கின்றார்.
”வனிந்து இரண்டு போட்டிகளில் ஆடாதது நாங்கள் ஏற்கனவே தயாராகி இருக்க வேண்டிய விடயங்களில் ஒன்று. வனிந்து தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஏற்றிருப்பதோடு, நாம் அதனை கருத்திற்கொள்ளாது முன்னோக்கிச் செல்ல வேண்டும். உண்மையில் உலகக் கிண்ணம் நெருங்கும் காரணத்தினால் இது மற்றைய வீரர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது என்றே கூற முடியும்.”
அதேவேளை பெதும் நிஸ்ஸங்கவின் உபாதை குறித்தும் பேசியிருந்த சில்வர்வூட் அதுவும் புதிய வீரர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
”கடந்த ஏழு அல்லது எட்டு மாதங்களாக அவர் (பெதும் நிஸ்ஸங்க) இலங்கையின் முன்வரிசை வீரர்களில் முக்கியமான ஒருவர்களில் இருப்பதோடு தொடர்ச்சியாகவும் ஓட்டங்களை குவிக்கின்றார். அத்துடன் அண்மையில் அவரிடம் இருந்து ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் சிறப்பான இன்னிங்ஸ்களும் வெளிப்பட்டிருக்கின்றது. எனினும் அவர் நீண்ட நாட்கள் ஓய்வில் இருக்காமல் அணிக்கு மீள்வார் என நான் எதிர்பார்ப்பது சிறந்த விடயமாக இருக்கின்றது. எனவே நாம் மிக விரைவில் அவரினை குழாத்திற்குள் இணைக்க முயற்சிகளை மேற்கொள்கின்றோம். அத்துடன் நான் முன்னர் குறிப்பிட்டது போன்று இதுவும் முன்னர் தேவையான போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துகின்றது. எனவே இது உலகக் கிண்ணத்தை இலக்காக கொண்டு இன்னுமொருவருக்கு வாய்ப்பினை ஏற்படுத்தப் போகின்றது.”
இதேவேளை இலங்கை அணியின் அண்மைய வெற்றிகளை கருத்திற்கொண்டு கருத்து வெளியிட்டிருந்த கிறிஸ் சில்வர்வூட் நடைபெறவிருக்கும் T20I தொடரில் இலங்கை அணி தொடரினை கைப்பற்றுவதற்குரிய எதிர்பார்ப்புக்குரிய அணியாக இருப்பதாக கூறியதோடு, பங்களாதேஷினை குறைவாக மதிப்பிட முடியாது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் T20I போட்டி இன்று மாலை 5.30 மணிக்கு சில்லேட் நகரில் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<