இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக் காலமாக சந்தித்து வருகின்ற தொடர் தோல்விகளுக்கு பாடசாலை மட்ட கிரிக்கெட்டில் காணப்படுகின்ற குறைபாடுகளே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, இலங்கை அணி அண்மைக்காலமாக சந்தித்து வருகின்ற தோல்விகளுக்கு பாடசாலை கிரிக்கெட்டும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும், பாடசாலை மட்டத்தில் விளையாடுகின்ற வீரர்கள் பொருத்தமான முறையில் திறமைகளை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்படாமை போன்ற காரணிகள் கிரிக்கெட் விளையாட்டு இவ்வாறு பின்னடைவை சந்திக்க காரணியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பின்டைவை எதிர்நோக்கியுள்ள பாடசாலை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்ட விசேட குழுவொன்று கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டது.
பாடசாலை கிரிக்கெட்டை மீட்டெடுக்க கல்வி அமைச்சு விசேட வேலைத்திட்டம்
இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பின்னடைவை…
இதனையடுத்து பாடசாலை கிரிக்கெட் சங்கம் மற்றும் கல்வி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவினருடனான விசேட சந்திப்பு நேற்று கல்வி அமைச்சரின் தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சிதத் வெத்தமுனி, மஹேல ஜயவர்தன, திலின கண்டம்பி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னடைவைச் சந்தித்துள்ள இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றமடையச் செய்யும் நோக்கில், எந்தவொரு நபருக்கும் பக்கச்சார்பின்றி பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் இதன்போது தெரிவித்தார். அத்துடன் பாடசாலை கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்காகவும் இதன்போது பல்வேறு யோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
அவற்றில்,
- தேசிய அணிக்கு 19 வயதிற்குட்பட்ட வீரர்களை தெரிவு செய்கின்ற குழுவில் பாடசாலை கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்வதற்கு முன் அந்த வாய்ப்பை மீண்டும் தெரிவுக்குழுவுக்கு வழங்குதல்.
- நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களுக்கும் சகல வசதிகளையும் கொண்ட உயர் தொழில்நுட்பத்தைக் கொண்ட விளையாட்டு பயிற்சிக் கூடமொன்றை நிர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- கிரிக்கெட் குழாமில் இணைத்துகொள்ளப்படுகின்ற ஒவ்வொரு வீரருக்கும் மாதாந்தம் தலா 2,500 ரூபா ஊக்குவிப்பு பணத்தை வழங்கல்.
- முதல்தர கிரிக்கெட் பயிற்சியாளர்களின் தகுதி மற்றும் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- பாடசாலை பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள், மாணவர்களின் நன்னடத்தை தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதற்குத் தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- வீரர்களின் போசாக்கு மட்டம் மற்றும் உடற்தகுதியினை பேணுவதற்கு விசேட கவனம் செலுத்தல்.
- பாடசாலை மாணவர்களின் நன்னடத்தை தொடர்பில் ஒழுக்கக் கோவையொன்றை நடைமுறைப்படுத்தவும், தற்போதுள்ள தண்டனைகளை மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தல்.
8.பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களின் தலையீடுகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
பாபர் அசாமின் அதிரடியுடன் உலக பதினொருவர் அணியை வீழ்த்திய பாகிஸ்தான்
நடைபெற்று முடிந்திருக்கும் உலக பதினொருவர் அணி மற்றும் பாகிஸ்தான்…
- 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற கிரிக்கெட் போட்டிகளைக் குறைத்து வீரர்களிடையே அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல்.
- பாடசாலை கிரிக்கெட்டுக்காக புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்தி புதிய சட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்தல்.
11.பாடசாலை வீரர்களுக்காக தெரிவு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டிகளை மாத்திரம் நடத்துவதற்கு அனுமதி வழங்கல்.
- பயிற்சியாளர்களை தெரிவு செய்வதில் புதிய நடைமுறைகளை கொண்டுவருதல்.
- நாட்டிலுள்ள சகல வசதிகளையும் கொண்ட கிரிக்கெட் மைதானங்களில் மாணவர்களுக்கு பயிற்சிகளைப் பெற்றுவதற்கான வாய்ப்பினை இலவசமாகப் பெற்றுக்கொடுத்தல்.
- பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்துகின்ற விலை உயர்ந்த விளையாட்டு உபகரணங்களுக்கு வரிச்சலுகைளைப் பெற்றுக்கொடுத்தல்.
- கிரிக்கெட் விளையாடாமல் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களை உள்ளடக்கிய ஒன்றிணைந்த அணிகளை ஒவ்வொரு கல்வி வலயங்களிலும் உருவாக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாட்டப்பட்டடன.
இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணிக்குத் தேவையான திறமையான வீரர்களை பாடசாலை மட்டத்திலிருந்து உருவாக்கும் நோக்கில் குறித்த வேலைத்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவும் இதன்மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதன்படி முன்னாள் வீரர்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்ள விசேட ஆலோசனைக் குழுவொன்று இதன்போது கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டது. இக்குழுவில் சிதத் வெத்தமுனி, ரொஜர் விஜேசூரிய, மஹேல ஜயவர்தன, ஜயந்த செனவிரத்ன, கால்டன் பேர்னார்ட் உள்ளிட்ட முன்னாள் வீரர்களுடன், பாடசாலை கிரிக்கெட் சங்க உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக தகுதியான எட்டு கிரிக்கெட் ஆளுமைகள்
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி என்பது அண்மைய…
எனவே, எதிர்வரும் காலங்களில் இவ்விசேட குழுவினால் முன்வைக்கப்படவுள்ள திட்ட வரைபுகளை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து பாடசாலை மட்ட கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் உறுதியளித்தார்.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் பிறகு மஹேல ஜயவர்தன ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில், ”நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் சகல வசதிகளையும் பெற்றுக்கொடுத்து தேசிய மட்டத்தில் சிறந்த வீர்ரகளை உருவாக்குவதே எமது நோக்கமாகும். கிரிக்கெட் எதிர்காலத்திற்கு பாடசாலை கிரிக்கெட் தான் சிறந்த இடமாகும். அங்குதான் அத்திவாரத்தைப் போட வேண்டும். அந்த வேலைத்திட்டத்தை மேலும் உறுதிப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு முன்னெடுக்கவுள்ள செயற்றிட்டங்களுக்கு நிச்சயம் ஒத்துழைப்பு வழங்குவோம்” என்றார்.
இதேவேளை, இலங்கை அணியின் மற்றுமொரு முன்னாள் வீரரான சிதத் வெத்தமுனி கருத்து வெளியிடுகையில், ”தற்போது பாடசாலை கிரிக்கெட்தான் முக்கியம். எனவே அதை முன்னேற்றப் பாதையில் கொண்டு சொல்வதுதான் காலத்தின் தேவையாகும். அங்குதான் சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்க முடியும்” என்றார்.