இலங்கை அணி இங்கிலாந்து மண்ணில் எவ்வாறு விளையாட வேண்டும்?

1532

இலங்கைக் கிரிக்கட் அணியின் முன்னாள் முன்னணித் துடுப்பாட்ட வீரரான சிதத் வெத்தமுனி இலங்கை அணி இங்கிலாந்து மண்ணில் எவ்வாறு சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டும்?, அவர் விளையாடும் காலகட்டத்தில் மிகவும் அஞ்சி எதிர்கொண்ட பந்துவீச்சாளர்கள் யார்? நவீன கிரிக்கட் விளையாட்டில் டி20 கிரிக்கட் எவ்வாறான மாற்றங்களைச் செய்துள்ளது? போன்ற கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார்.

இலங்கை அணியின் கிரிக்கட் வர்ணனையாளர் ரொஷான் அபேசிங்ஹ சிதத் வெத்தமுனியுடன் இடம்பெற்ற நேர்காணல்

கேள்வி: 2016ஐயும் 1984ஐயும் ஒப்பிடும் போது 1984இல் கிரிக்கட் என்பது இலங்கைக்குப் புதியது. உங்களைப் போன்ற ஒரு வீரருக்கு ஒரு போட்டியைக் கொண்ட டெஸ்ட் தொடர் எவ்வாறான ஒரு சவாலாக அமைந்தது? அப்போட்டியில் நீங்கள் எவ்வாறான விஷேட விடயங்களைக் கையாண்டீர்கள்?

பதில்: நீங்கள் கூறினீர்கள் ஒரு போட்டியைக் கொண்ட தொடர் என்று அது ஒரு முக்கிய சொல்லாகும். நீங்கள் ஒரு போட்டியைக் கொண்ட போட்டித் தொடருக்கு செல்லும் போது கடந்த போட்டிகளில் எந்த அளவு சிறப்பாக விளையாடி இருந்தாலும் அந்த ஒரு போட்டியில் தோல்வியுற்றால் அந்தத் தொடர் சிறந்த தொடராக அமையாது. வெற்றிகரமற்ற தொடராகவே அமையும். இதானால் அது ஒரு பெரிய அழுத்தமாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் விளையாடும் போது வீரர்கள் விரைவில் இங்கிலாந்து சூழ்நிலையை அறிந்து அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீரரும் வெவ்வேறான அணுகுமுறைகளைக் கொண்டு இருப்பார்கள். அதற்கிணங்க நான் துடுப்பெடுத்தாடும் போது அவுஸ்திரேலிய சூழ்நிலைகளில் விளையாடுவது போன்று பின்காலை (Back Foot) விட முன்காலை (Front Foot) அதிகாமாக உபயோகிப்பேன். முக்கிய விடயம் என்னவென்றால் ஆரம்பத்திலேயே வீரர்கள் அங்குள்ள சூழ்நிலையில் எவ்வாறான போட்டியை விளையாட வேண்டும் என்பதை அறிய வேண்டும். இந்தத் தடவை மே மாத ஆரம்பத்தில் அங்கு சென்றுள்ளோம். அங்கு காலநிலை நமக்கு சாதகமாக இருக்காது. அதனால் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஆனால் நாம் அங்குள்ள காலநிலையை அறிந்து அதற்கு ஏற்றவகையில் தம்மைத் தயார்படுத்துவது மிக முக்கியமானது.


கேள்வி: இங்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள இளமையான, புதிய, அனுபவமற்ற இலங்கை வீரர்களுக்கு நீங்கள் பயிற்சிவிப்பாளராக இருந்தால் எவ்வாறான அறிவுரைகளை வழங்குவீர்கள்?

பதில்: நான் நினைக்கிறேன் நாம் இளைய வீரர்களைக் கொண்ட துடுப்பாட்ட வரிசையைக் கொண்டுள்ளோம். அவர்கள் அதிக அனுபவமற்ற வீரர்கள். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. இங்கு அவர்கள் தமது திறமைகளைப் போட்டியில் வெளிப்படுத்தி பங்களிப்பு செய்ய வேண்டும். எனது அறிவுரை ஆரம்ப நாட்களில் அங்குள்ள சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு முயன்றளவு அதிக நேரத்தைத் துடுப்பாட்டத்தில் செலவழிக்க வேண்டும். அவ்வாறு துடுப்பெடுத்தாடி நல்ல மன உணர்வைப் பெற்று அந்த துடுப்பாட்டத்தைப் போட்டியில் செயல்படுத்த வேண்டும். நான் இங்கிலாந்து மண்ணில் விளையாடும் போது ஒரு வீரரை அழைத்து பந்துவீசச் சொல்லி துடுப்பெடுத்தாடுவேன். அவ்வாறு துடுப்பெடுத்தாடி பந்தை சரியாக மட்டையில் பட வைத்து ஒழுங்காகப் பந்தை முகங்கொடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெறுவேன். முன்பு கூறியது போன்று சூழ்நிலையை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் ஆரம்பப் பயிற்சிகளை அதிகமாகப் பெற வேண்டும்.


கேள்வி: டி20 போட்டிகள் துடுப்பாட்ட வீரர்களின் துடுப்பாட்ட நுட்பங்களில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன? அதை எவ்வாறு இங்கிலாந்து சூழ்நிலையில் சாமாளிப்பது?

பதில்: இது ஒரு கடினமான கேள்வி. தற்போதைய கிரிக்கட்டையும் ஆரம்ப கால கிரிக்கட்டையும் பார்க்கும் போது துடுப்பாட்ட மட்டை பாரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துடுப்பாட்ட வீரர்கள் தற்போது அதிரடியாக ஆடுவதிலும் “Over the top” என்ற வகையில் ஆடுவதிலும் சார்ந்திருகிறார்கள். இவ்வாறான மாற்றங்களால் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள சிரமமாக இருக்கும். இதனால் துடுப்பாட்ட வீரர்கள் தமது துடுப்பாட்ட நுட்பங்களை ஒழுங்கமைக்க வேண்டும். ஏன் என்றால் இந்தக் காலத்தில் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளயாட வேண்டியுள்ளது. அவை ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டவை. முக்கியமான விடயம் என்னவென்றால் நீங்கள் ஒரு சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் என்றால் மற்றைய போட்டிகளிலும் சிறப்பாக ஆட முடியும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சங்கக்கார மற்றும் மஹேல. அவர்கள் இருவரும் மூன்று வடிவிலான போட்டிகளிலும் சரியான கிரிக்கட்டை விளையாடுவார்கள். அதனால் நினைக்கிறேன் நல்ல நுட்பங்கள் முக்கியமானவை. தற்போது நமது வீரர்கள் சிறந்த ஒரு பயிற்சிவிப்பாளரைக் கொண்டுள்ளார்கள். இவர்கள் வேகமாக விளையாட்டைக் கற்க வேண்டும். இந்த வீரர்கள் கடந்த ஒரு வருடமாக ஒன்றாக விளையாடுகிறார்கள். அதனால் அவர்கள் கற்கிறார்கள். மெதிவ்ஸ் நல்ல நிலையில் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். அவர் கடந்த வருடம் சிறந்த தொடரைப் பெற்றிருந்தார். இங்கிலாந்துக்கு செல்லும் போது அந்த மனோபாவம் தொடரவேண்டும்.


கேள்வி: நீங்கள் டி20 போட்டிகளில் விளையாடி இருந்தால் எவ்வாறான மாற்றங்களை மேற்கொள்வீர்கள்?

பதில்: நான் நினைக்கிறேன் அது ஒரு மனப்பான்மையில் தங்கியுள்ளது. நீங்கள் என்ன செய்யவேண்டுமென்றால், நீங்கள் வேகமாக உங்களது திறமைகளை மேம்படுத்தி விளையாட வேண்டும். தடுத்தாடும் பந்துகளை “Over the top” என்ற முறையில் அடித்தாடும் மனப்பான்மையைப் பெற வேண்டும். எல்லா போட்டிகளும் ஒன்று தான். ஆனாலும் தாம் டி20 போட்டிகளில் விளையாடும் விதத்தை மேம்படுத்தி விளையாட வேண்டும்.


கேள்வி: இலங்கை அணி கடந்த போட்டிகளில் மோசமான தோல்விகளைப் பெற்று, ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையற்ற வீரர்களாக மாறியுள்ளார்கள். இலங்கை அணி மீண்டும் பழைய நிலைக்கு / நல்ல நிலைக்கு வர அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்: முக்கிய விடயம் என்வென்றால் நீங்கள் நம்பிக்கையிழக்கக் கூடாது. நாம் பல வருடங்களாக சிறப்பாக செயற்பட்டுள்ளோம். எல்லா அணியும் ஒரு காலகட்டத்தில் சில தடங்கலுக்கு முகங்கொடுக்கும். அந்த அடிப்படையில் இலங்கை அணி தற்போது சில சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளது. நான் நினைக்கிறேன் நல்ல பயிற்சியாளர் முக்கியம். அந்த அடிப்படையில் க்ரஹெம் போர்ட் சிறந்த ஒரு பயிற்சிவிப்பாளர். நான் அவரோடு செயற்பட்டது கிடையாது. ஆனால் குமார் சங்கக்கார அவர் தொடர்பில் நல்லாதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நாம் ஒரு அனுகூலத்தைப் பெற்றுள்ளோம். சங்கக்கார அங்குள்ளார். அவர் மூலம் அறிவுரைகளைப் பெறலாம். அத்தோடு மஹெலவும் அங்குள்ளார் அதனால் அவரிடமும் பேச முடியும். சுருக்கமாகக் கூறப்போனால் போட்டியை வேகமாக கற்க வேண்டும். நான் என்ன கூறுகின்றேன் என்றால் நம்பிக்கையிழக்க வேண்டாம். அவர்களுக்கு சற்று காலம் அவகாசம் கொடுங்கள்.


கேள்வி: இலங்கை அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும் துடுப்பாட்டம் மோசமாகக் காணப்படுகிறது. இந்நிலைக்கு என்ன காரணம்? நுட்பங்களில் பிரச்சினையா? அணுகுமுறை? மனநிலை? அல்லது அவர்கள் அனுபவிக்கும் அழுத்தமா?

பதில்: நான் நினைக்கிறேன் அதில் சில விடயங்கள் கலந்துள்ளன. அது துடுப்பாட்ட நுட்பங்களிலும் தான். நான் கடந்த இரு வருடங்களில் இலங்கை அணியின் துடுப்பாட்ட நுட்பங்கள் வீழ்ச்சி அடைந்திருப்பதை கண்டிருக்கிறேன். நாம் அடிப்படைகளை பின்பற்றாமல் ஆக்கிரோசமான முறையில் விளையாடுகிறோம். அதற்கு டி20 போட்டிகள் ஒரு காரணமாக இருக்கலாம். நான் உணர்கிறேன் நமது வீரர்கள் பாரமான மட்டைகளை உபயோகிக்கிறார்கள். முதலில் அவர்கள் பாரமற்ற மட்டைகளின் மூலம் அடிப்படைகளை சரிவர நிறைவேற்றிய பின் பலமாக அடித்தாடும் யூகங்களுக்கு செல்லலாம். நாம் துடுப்பாட்ட நுட்பங்களை சரிவர அணுகாமல் வீழ்ந்துள்ளோம். அதை சரிவர நிறைவேற்ற, அதில் தான் நாம் நேரம் செலவழிக்க வேண்டும்.


கேள்வி: உங்களது தனிப்பட்ட கிரிக்கட் வாழ்க்கை தொடர்பாக கூறுவதாக இருந்தால் லோர்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த போட்டியில் நடந்த சுவாரஸ்யமான விடயங்கள் எவை?

பதில் : எனக்கு இன்னும் ஞாபகம் உள்ளது, நான் துடுப்பாட செல்ல முன் “பேட்” மற்றும் “ஹெல்மட்” அணிந்திருக்கும் போது ஒருவர் வந்து “உங்களுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது” என்று கூறினார். அதை பார்க்கும் போது ஒரு மடல் போன்று தோன்றியது. நான் துடுப்பாட செல்ல முன் அதை வாசிக்கும் நோக்கோடு அதைத் திறந்து படித்தேன். அது எனது நண்பன் ரொஹான் விஜெரத்ன உங்களுக்கு அவரைத் தெரிந்திருக்கும் அவரிடமிருந்து தான் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் “இது வெறும் ஒரு போட்டியே!! களம் சென்று அமைதியாக துடுப்பெடுத்தாடுங்கள்” என்று எழுதப்பட்டு இருந்தது. நான் நினைக்கிறேன் அது எனக்கு உதவியது. நான் களத்திற்கு சென்ற போது மனம் அமைதியாக இருக்கவில்லை அதனால் நான் பெருமூச்சு விட்டேன். பின் இது ஒரு வெறும் போட்டியே சென்று துடுப்பெடுத்தாடு என்று கூறிக்கொண்டேன். இரண்டாவதாக நான் களத்தில் இருக்கும் போது மைதனத்தில் இருந்தோர் எனக்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது எதிரணி வீரர்கள் என்னோடு இணைந்து ” இது என்ன? இது எதைப் பற்றியது என்று கேட்டார்கள். அப்போது போட்டியில் இருந்த அழுத்தம் சென்றுவிட்டது. இதனால் நான் நிம்மதி அடைந்தேன். இது அந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யமான விடயங்களாகும்.


கேள்வி: நீங்கள் துடுப்பெடுத்தாடும் போது எந்த பந்துவீச்சாளருக்கு நீங்கள் முகங்கொடுக்க சிரமப்பட்டீர்கள்?

பதில் : 1980 களில் பல பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். அவர்களில் கபில் தேவ், இம்ரான் கான், ஹெட்லி, மேற்கிந்திய தீவுகளில் 4 வீரர்கள், கார்னர், லிலி, ஹொக், போன்றவர்கள் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள் ஆனாலும் நாம் அவர்களைக் கடந்து வந்தோம்.