மோசமான துடுப்பாட்டத்தால் செலஞ்சர் கிண்ணத்தை பறிகொடுத்த இலங்கை

2158

இந்தியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான செலஞ்சர் கிண்ண இறுதிப் போட்டியில் துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறிய இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின் இளம் வீரர்கள் இந்திய புளூ அணியிடம் 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து கிண்ணத்தை பறிகொடுத்தனர்.

இந்தியாவின் மூன்று இளையோர் அணிகளுடன் மோதி சிறப்பாக ஆடிய இலங்கை பதினொருவர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோதும் இறுதிப் போட்டியில் ஆரம்ப வரிசையில் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டத்தில் விக்கெட்டை தாரைவார்த்தது அணிக்கு மீள முடியாத நிலையை ஏற்படுத்தியது.

செலஞ்சர் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை இளையோர் அணி

நிபுன் தனஞ்சய மற்றும் நுவன் பெர்னாண்டோவின் அபார….

மும்பையில் இன்று (02) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இந்திய புளூ அணியின் முதல் விக்கெட்டை 31 ஓட்டங்கள் இருக்கும்போதே அணித் தலைவர் அயன சிறிவர்தன வீழ்த்தினார்.

எனினும் 2 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த எச்.ஜே. ரானா மற்றும் உர்வில் படேல் 120 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்துகொண்டனர். எனினும் அணியின் ஓட்டங்கள் 151 ஆக இருக்கும்போது இந்த இருவரின் விக்கெட்டுகளையும் இலங்கை அணியால் அடுத்தடுத்து வீழ்த்த முடிந்தது.

எச்.ஜே. ரானா 78 ஓட்டங்களை எடுத்திருந்தபோது சிறிவர்தனவின் பந்துக்கு ஆட்டமிழந்ததோடு நுவனிது பெர்னாண்டோ வீசிய அடுத்த ஓவரில் உர்வில் படேல் 57 ஓட்டங்களுடன் போல்டானார்.

இந்நிலையில் மத்திய வரிசையில் இறுதியாக வந்த எம்.எஸ் பண்டஜ் வேகமாக பெற்ற அரைச்சதம் இந்திய புளூ அணி 200 ஓட்டங்களை தாண்ட உதவியது. 50 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 4 பௌண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 54 ஓட்டங்களை பெற்றார்.

இறுதியில் இந்திய புளூ அணி 50 ஓவர்களுக்கும் சகல விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது இசிபத்தன கல்லூரியின் அயன சிறிவர்தன 8 ஓவர்கள் பந்து வீசி 36 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன்மூலம் அவர் இந்த தொடரில் இலங்கை இளையோர் அணி சார்பில் அதிகபட்சமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

புனித அலோசியஸ் கல்லூரியின் சகலதுறை வீரர் ரவின்து சன்ஜன தனது சுழற்பந்து வீச்சு மூலம் மிரட்டினார். 10 ஓவர்கள் பந்துவீசிய அவர் 42 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நுவனிது பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

FIFA உலகக் கிண்ண குழு நிலை அணிகள் அறிவிப்பு

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில்..

லீக் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி மொத்தம் 7 விக்கெட்டுகளை பதம்பார்த்த புனித அலோசியஸ் கல்லூரியின் ஹரீன் புத்தில 10 ஓவர்கள் பந்துவீசி 60 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து விக்கெட் வீழ்த்தாதது அணிக்கு பின்னடைவாக இருந்தது.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை இளம் அணிக்கு முதல் ஐந்து வரிசை வீரர்களில் எவரும் கைகொடுக்கவில்லை. ஆரம்ப வீரர்களான தனஞ்சய லக்ஷான் (06) மற்றும் விஷ்வ சதுரங்க (01) ஓற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த சன்தூஷ் குணதிலக்க (10), நிபுன் தனன்ஞய (18) மற்றும் நுவனிது பெர்னாண்டோ (17) ஆகியோர் 20 ஓட்டங்களைக் கூட எட்டவில்லை. குறிப்பாக நுவனிது பெர்னாண்டோ இந்த தொடரில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி சார்பில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவராவார். அவர் தனது நான்கு போட்டிகளிலும் மொத்தமாக 168 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் இலங்கை அணி 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் இருந்தபோது 6ஆவது விக்கெட்டுக்காக இணைந்த நிஷான் மதுஷ்க மற்றும் ரவின்து சன்ஜன ஆகியோர் பொறுப்புடன் ஆடி நம்பிக்கை தந்தனர்.

இருவரும் 71 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தபோது 28 ஓட்டங்களை குவித்த சன்ஜன அனாவசியமாக ரன் அவுட் ஆனார். மறுமுனையில் ஆடிய மதுஷ்கவும் அடுத்த ஓவரிலேயே ரன் அவுட் ஆகி இலங்கை அணியின் கடைசி எதிர்பார்ப்பையும் சிதறடித்தார். 58 பந்துகளுக்கு முகம்கொடுத்த மதுஷ்க 4 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 44 ஓட்டங்களை பெற்றார்.

அடுத்து வந்த கடைசி வரிசை விரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க இலங்கை இளையோர் அணி 45.4 ஓவர்களில் 149 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கையின் ஒரு நாள், T-20 அணித் தலைவராக திசர பெரேரா

சகல துறை வீரரும் அதிரடி வீரருமான திசர பெரேரா, இந்தியாவுடன்ந…

இதன்போது இந்திய புளூ அணி சார்பில் சிவம் மாவி மற்றும் என்.. ரத்வா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் சிவம் மாவி இந்த தொடரில் அதிகபட்சமாக 9 விக்கெட்டுகளை பதம்பார்த்து அயன சிறிவர்தனவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.   

செலஞ்சர் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை தீர்மானிக்கும் போட்டியும் இன்று நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இந்திய கிரீன் அணி 50 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 285 ஓட்டங்களை பெற்றது. பதிலெடுத்தாடிய இந்திய ரெட் அணி அந்த இலக்கை எட்ட போராடியபோதும் 46 ஓவர்களில் 253 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

தமது நாட்டின் கனிஷ் ட வீரர்களுக்காக இந்திய கிரிக்கெட் சபை நடாத்தும் இந்த ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை கனிஷ்ட அணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இலங்கை இளையோர் அணி இந்திய கிரீன், புளூ மற்றும் ரெட் அணிகளுடன் லீக் போட்டிகளில் ஆடியது.

இலங்கை அணி தனது லீக் ஆட்டங்களில் மூன்றில் இரண்டு போட்டிகளில் வென்றே இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த போட்டித் தொடரில் சோபித்த வீரர்களைக் கொண்டே அடுத்த மாதம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்திற்கு இந்தியா தனது அணியை தேர்வு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது இலங்கை இளையோர் அணிக்கும் சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்திய புளூ – 244 (50) – எச்.ஜே. ரானா 78, உர்வில் படேல் 57, எம்.எஸ். பண்டஜ் 53, அயன சிறிவர்தன 4/36, ரவின்து சன்ஜன 3/42, நுவனிது பெர்னாண்டோ 2/41

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி – 149 (45.4) – நிஷான் மதுஷங்க 44, ரவின்து சன்ஜன 28, சிவம் மாவி 3/15, என்.. ரத்வா 3/28

முடிவு இந்திய புளு அணி 95 ஓட்டங்களால் வெற்றி