இஷான், ஸ்ரேயாஸ் ஜயரின் ஒப்பந்தத்தை இரத்து செய்த பிசிசிஐ

BCCI Contracts 2023-24

212
BCCI Contracts 2023-24

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நட்சத்திர வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் நடப்பாண்டு ஒப்பந்தப் பட்டியல் விபரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பிசிசிஐ) நேற்று (28) வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பளத்தைக் கொண்ட A+ பிரிவில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா, விராட் கோலி, வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, 5 கோடி ரூபாய் ஆண்டு சம்பளம் கொண்ட A பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், மொஹமட் ஷமி, மொஹமட் சிராஜ், கே.எல் ராகுல், சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய 6 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், கே.எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் B பிரிவில் இருந்து A பிரிவுக்கு முன்னேறியுள்ளனர்.

3 கோடி ரூபாய் ஆண்டு சம்பளம் கொண்ட B பிரிவில், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொண்ட C பிரிவில் 15 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். வொஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே உள்ளிட்டோர் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற உள்ளனர்.

இதனிடையே, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொண்ட C பிரிவில், இம்முறை புதிதாக 10 பேர் இணைந்துள்ளனர். அதேசமயம், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனின் ஆகிய 2 வீரர்களினதும் பெயர்கள் நடப்பாண்டு ஒப்பந்தப் பட்டியலில் பரிசீலிக்கப்படவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பிசிசிஐ-யின் எச்சரிக்கையையும் மீறி ஐபிஎல் தொடருக்காக உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கிண்ணத்தில் குறித்த 2 வீரர்களும் பங்கேற்காமல் இருந்த காரணத்தால் அவர்களது மத்திய ஒப்பந்தத்தை பிசிசிஐ இரத்து செய்துள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் இதற்கு முன்பாக 3 கோடி சம்பளம் பெறும் B பிரிவில் இருந்தார். இஷான் கிஷன் ஒரு கோடி சம்பளம் பெறும் C பிரிவில் இருந்தார். தற்பொழுது இவர்கள் இந்த பிரிவுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்குள், குறைந்தபட்சம் 3 டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 ஒருநாள், அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடும் வீரர்கள், C பிரிவில் சேர்க்கப்படுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள துருவ் ஜுரல் மற்றும் சர்ப்ர்ஸ் கான், தர்மசாலாவில் நடைபெறும் 5ஆவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட உள்ளனர். இதனால், C பிரிவில் அவர்கள் இருவரும் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<