அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் உபாதைக்குள்ளாகியிருந்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான், உலகக் கிண்ணத் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை இன்று (19) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய அணி கடந்த 9ம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடி தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது. இந்தப் போட்டியில் சதம் கடந்த ஷிகர் தவான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
உலகக் கிண்ணத்திலிருந்து முழுமையாக விலகும் நிலையில் ஷிகர் தவான்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் காயம்….
எனினும், குறித்தப் போட்டியில் துரதிஷ்டவசமாக ஷிகர் தவான் உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் நெதன் குல்டர்-நைல் வீசிய பந்து அவரது இடதுகை பெருவிரலை தாக்கியதால் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக மூன்று வாரங்கள் ஷிகர் தவானால் போட்டிகளில் விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அவர் உலகக் கிண்ண குழாத்திலிருந்து நீக்கப்பட மாட்டார் எனவும், உபாதை குணமடைந்த பின்னர் போட்டிகளில் பங்கேற்பார் எனவும் இந்திய கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியிருந்தது. ஆனாலும், இன்று வெளியாகிய அறிவிப்பின்படி, ஷிகர் தவான் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து முழுமையாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சுனில் சுப்ரமணியம் குறிப்பிடுகையில், “ஷிகர் தவானின் உபாதை முழுமையாக குணமடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும் (ஜுலை நடுப்பகுதி) என வைத்திய நிபுணர்கள் அறிவித்ததை தொடர்ந்து, அவர் உலகக் கிண்ண குழாத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ரிஷாப் பாண்ட்டை அணியில் இணைப்பதற்கான கோரிக்கை ஐசிசிக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
ஷிகர் தவான் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், மேலதிக வீரராக பெயரிடப்பட்டிருந்த இளம் துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான ரிஷாப் பாண்ட்டை கடந்த 13ம் திகதி இந்திய கிரிக்கெட் சபை இங்கிலாந்துக்கு அழைத்திருந்தது. இதன்படி ஐசிசி அனுமதி வழங்கும் பட்சத்தில் இந்திய அணியின் 15 பேர்கொண்ட குழாத்தில் பாண்ட் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவானின் உபாதையைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்கிறார் ரிஷப் பான்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் காயம்….
இதேவேளை, ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் உபாதைக்குள்ளாகியிருந்த சந்தர்ப்பத்தில், இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக கே.எல்.ராஹுல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்பட்டிருந்தார். குறித்த போட்டி ராஹுல் அரைச்சதம் கடந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<