கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஷிகர் தவான்

2
SHIKHAR DHAWAN RETIRES

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 13 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வந்த தவான், 2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். வயது முதிர்வு உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடாமல் இருந்து வருகிறார்.

இதுவரை 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான் 6793 ஓட்டங்களை எடுத்திருக்கிறார். இதில், 17 சதங்களும், 39 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 143 ஓட்டங்களை எடுத்திருக்கிறார்.

இந்தியாவிற்காக இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 68 T20i போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான், கடைசியாக 2018ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரிலும், 2022ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும், 2021ஆம் ஆண்டு கடைசியாக சர்வதேச T20i போட்டிகளிலும் விளையாடினார்.

இந்த நிலையில், உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகப் போவதாக ஷிகர் தவான் நேற்று (24) உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளபக்கத்தில் காணொளி வாயிலாக தனது ஓய்வு முடிவினை அறிவித்திருந்தார். அந்தக் காணொளியில், ‘நாட்டிற்காக விளையாடியதை பெருமையாகக் கருதுகிறேன். எனது நாட்டிற்காக நான் நிறைய விளையாடிவிட்டேன். இனி உனது நாட்டிற்காக உன்னால் விளையாட முடியாதே என்று வருத்தப்படக் கூடாது. இத்தனை நாட்கள் விளையாட வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி கொள்’ என எனக்கு நானே சமாதானம் கூறிக்கொள்கிறேன். இதுவரை என் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி!’ என்று கூறியிருக்கிறார்.

இதனிடையே, ஐபிஎல் தொடரில் இதுவரை 222 போட்டிகளில் விளையாடியுள்ள தவான், 2 சதங்கள் மற்றும் 51 அரைச் சதங்களுடன் 6,769 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். அத்துடன், இவர் கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்று, அந்த அணியை வழிநடத்தி இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<