பாகிஸ்தான் அகதிகளுக்கு உதவிய இந்திய வீரர் சிக்கர் தவான்

192

இந்தியாவின் புது டெல்லியில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் அகதிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் படுக்கை தளபாடங்கள் என்பவற்றை இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சிக்கர் தவான் வழங்கியுள்ளார். 

இந்தியாவில் நடந்த போலியான இலங்கை கிரிக்கெட் தொடர் பற்றி விசாரணை

பாகிஸ்தானில் உள்ள அகதிகள் தங்கியிருந்த டெல்லியின் மஜ்லிஸ் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள இடத்துக்கு ஆச்சரிய விஜயத்தை மேற்கொண்ட சிக்கர் தவான், அங்குள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கி, அவர்களின் முகத்தில் புன்னகையை மலரச் செய்துள்ளார்.

அங்குள்ள சிறுவர்களை சந்தித்த தவான் அவர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை அன்பளிப்பு செய்ததுடன், இனிவரும் காலங்களில் அந்த மக்களுக்கு உதவிகளை வழங்கவுள்ளதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள மக்களுக்கு டெல்லி ரைடிங் கழகம் இதுவரை காலமும் உதவிகளை வழங்கிவந்துள்ளது. இந்த நிலையில், சிக்கர் தவான் குறித்த இடத்துக்கு விஜயம் செய்து, அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த இந்த விஜயம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில், மஜ்லிஸ் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகில் வசித்துவரும் அகதிகளுடன் எனது காலை நேரத்தை சந்தோஷமாக கொண்டாடினேன். அவர்கள் எனக்கு மிகவும் சிறந்த வரவேற்பை கொடுத்தனர்”  என பதிவிட்டிருந்தார்.

இதேவேளை, இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட இவர், “எனது நண்பர் அகதி முகாமில் உள்ள மக்களுக்கு சேவையாற்றி வருகின்றார். அவர் கழிப்பறைகள் மற்றும் மரங்கள் என்பவற்றை அந்த பகுதிகளில் வைத்து வருகின்றார். அவர்கள் கொவிட்-19 ஊரடங்கு காலப்பகுதியில் அதிகமான உணவுகளை இந்த மக்களுக்கு வழங்கியுள்ளனர். 

அதனால், நான் எவ்வாறு இவர்களுக்கு உதவுவது என சிந்தித்தேன். நாம் கிரிக்கெட் உபகரணங்களை இவர்களுக்கு வழங்கினோம். அத்துடன், இந்த மக்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். இப்போது அவர்களால் விளையாட முடியும். அதேநேரம், எனக்கு அனுசரணை வழங்கும் கொக்கபுரா நிறுவனத்துடன் கலந்துரையாடி இவர்களுக்கு உதவிகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டேன்.  அவர்களும் தேவையான உதவிகளை வழங்குவர். அதற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 121

சிக்கர் தவான் கொவிட்-19 காரணமாக நாட்டில் தங்கியுள்ள பின்தங்கிய மக்களை சந்தித்து வருவதுடன், அவரது மனிதாபிமானத்தையும், உதவிகளையும் வழங்கி வருகின்றார். கொவிட்-19 காரணமாக இந்தியாவை பொருத்தவரை, பின்தங்கிய மக்கள் தங்களுடைய வாழ்வாதார தேவைகளை பூர்த்திசெய்வதற்கு தடுமாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க