பானுக, தவானின் பிரகாசிப்புகளுடன் வெற்றிப்பாதைக்கு திரும்பிய பஞ்சாப்

Indian Premier League 2022

686
Shikhar Dhawan and Bhanuka Rajapaksa

IPL தொடரில் நேற்று (25) நடைபெற்ற சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பானுக ராஜபக்ஷ மற்றும் சிக்கர் தவான் ஆகியோரின் சிறப்பான இணைப்பாட்டத்தின் உதவியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியை உறுதிசெய்தது.

பானுக ராஜபக்ஷ பஞ்சாப் கிங்ஸ் அணியில் முதல் மூன்று போட்டிகளில் விளையாடியிருந்த போதும், ஜொனி பெயார்ஸ்டோவின் வருகையின் பின்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

>> அற்புத பந்துவீச்சால் மும்பை அணிக்கு அழுத்தம் கொடுத்த சமீர

எனினும் ஜொனி பெயார்ஸ்டோவ் கடந்த நான்கு போட்டிகளிலும் பிரகாசிக்க தவறிய காரணத்தால், துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் நோக்கில் பானுக ராஜபக்ஷ அணியில் இணைக்கப்பட்டிருந்தார். அதன்படி மீள்வருகையை சிக்கர் தவானுடன் சிறந்த இணைப்பாட்டமொன்றை பகிர்ந்து அறிவித்திருந்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் 37 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்திருந்தது. குறைந்த ஓட்டவேகத்துடன் துடுப்பாட்டத்தை நகர்த்திய பஞ்சாப் அணிக்கு பானுக ராஜபக்ஷ மற்றும் சிக்கர் தவான் ஆகியோர் அபாரமாக துடுப்பெடுத்தாடி நம்பிக்கையளித்தனர்.

இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 110 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், பானுக ராஜபக்ஷ 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சிக்கர் தவான் 59 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்களை குவித்தார்.

இவர்களின் இந்த துடுப்பாட்ட பிரகாசிப்புடன் பஞ்சாப் அணி 187 ஓட்டங்களை குவித்ததுடன், அம்பத்தி ராயுடுவின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் (39 பந்துகள் 78 ஓட்டங்கள்) வெற்றியிலக்கை சென்னை சுபர் கிங்ஸ் அணி நெருங்கிய போதும், 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களையே பெறமுடிந்தது. எனவே, 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது.

இதேவேளை, சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக, இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷன விளையாடியிருந்தார். இவர் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 32 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.

இந்த போட்டியில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், சென்னை சுபர் கிங்ஸ் அணி 2 வெற்றிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<