தொடர்ந்தும் அவதிப்படும் முரளி விஜய் இலங்கையுடனான டெஸ்டில் இருந்து நீக்கம்

832
Murali Vijay

இம்மாதம் 26ஆம் திகதி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியில் இணைக்கப்பட்டிருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான முரளி விஜய் மணிக்கட்டு உபாதையில் இருந்து மீளாத காரணத்தினால், அவருக்குப் பதிலாக இந்திய அணியில் சிக்கர் தவான் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் சிரேஷ்ட தேர்வுக்குழாம், முரளி விஜய்க்கு பதிலாக சிக்கர் தவான் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதை இன்று (17) வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் உறுதிப்படுத்தியிருந்தது.

இந்திய அணி தமது சொந்த மண்ணில் விளையாடியிருந்த அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் முரளி விஜய் காயத்திற்கு உள்ளாகியிருந்தார். இதனால் அவர் அத்தொடரில் ஒரு போட்டியில் பங்கேற்காமலும் போயிருந்தார்.

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரினை அடுத்து, சிகிச்சைகளுக்காக இங்கிலாந்து பயணமாகிய விஜய், கடந்த பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரிலும் பிரசன்னமாகியிருக்கவில்லை.

தற்போது, அவரது காயம் குணமாகியிருப்பினும் பயிற்சி ஆட்டங்களின் போது, மீண்டும் வலது மணிக்கட்டில் அவர் வலியை உணர்ந்த காரணத்தினால், அவருக்கு இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது போயுள்ளது.

விஜயின் தற்போதைய உபாதை தொடர்பாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது,

அவுஸ்திரேலிய அணியுடனான தொடரின் போது உபாதைக்கு உள்ளாகியிருந்த விஜய், பயிற்சி ஆட்டங்களின் போது தனது வலது மணிக்கட்டில் அதிக வலியை உணர்வதாக தெரிவித்திருந்தார். இதனால், நாம் எமது வைத்தியர்கள் குழாத்தினை வைத்து அவரை பரிசோதித்தோம். எமது நிபுணர்கள், அவர் காயத்திலிருந்து மீள இன்னும் காலம் கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்கள். “

என தமது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இலங்கை அணிக்கெதிரான இந்திய டெஸ்ட் குழாம்

விராத் கோலி (அணித் தலைவர்), சிக்கர் தவான், KL ராகுல், செட்டெஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே (துணைத் தலைவர்), ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, வித்திமன் சஹா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, புவ்னேஸ்வர் குமார், மொஹமட் சமி, குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த்