தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் தொடரில் ஷ்யாமா துலானிக்கு தங்கம்

200

தாய்லாந்தின் பெங்கொக் நகரில் நடைபெற்றுவருகின்ற தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை அணி, ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இதில் பெண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட ஷ்யாமா துலானி முதல் தடவையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.  

தாய்லாந்து மெய்வல்லுனர் தொடரிலிருந்து சண்முகேஸ்வரன் நீக்கம்

தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இவ்வார இறுதியில் ஆரம்பமாகவிருந்த தாய்லாந்து…

தாய்லாந்தின் பெங்கொக் நகரில் உள்ள சர்வதேச விளையாட்டரங்கில் இவ்வருடத்துக்கான தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடர் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகியது. இம்முறை போட்டிகளில் இலங்கையிலிருந்து 7 வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.  

இந்த நிலையில், போட்டிகளில் 3ஆவது நாளான நேற்று (21) நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட ஷ்யாமா துலானி போட்டியை ஒரு நிமிடம் 02:49 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்றார்.  

குறித்த போட்டியில் பப்புவா நியூகினியாவைச் சேர்ந்த கொனியல் டொன்னா (ஒரு நிமி. 04.67 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், தாய்லாந்தைச் சேர்ந்த சுசாதா மெஸ்ரி (ஒரு நிமி. 12.25 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.

இதேநேரம், ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அசங்க ரத்னசேன, 52.67 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

அவருடன் போட்டியிட்ட சீனா தாய்ப்பேயின் சியா ஸுவான் யூ (50.98 செக்.) தங்கப் பதக்கத்தையும், இந்தோனேஷியாவின் அன்ட்ரியன் (52.33 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.

இந்த நிலையில், பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட சாரங்கி சில்வா, 6.12 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார். இது அவரது அதிசிறந்த தூரப் பெறுமதியாகும்.

இந்தப் போட்டியில் பிலிப்பைன்ஸின் மாரிஸ்டெல்லா சுனாங் (6.23 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், இந்தோனேஷியாவின் மெரியா நடாலியா லொண்டா (6.18 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.

இதேநேரம், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட ப்ரியன்த லக்மால் 6ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

அதேபோல, ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட ஷா சந்தருவன், 4.60 மீற்றர் உயரத்தைத் தாவி 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

போட்டிகளின் இறுதி நாளான இன்று (21) நடைபெறவுள்ள ஆண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் தம்மிக ரணதுங்கவும், பெண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் லக்ஷிகா சுகன்தியும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<