39 பந்தில் 63 ஓட்டங்கள்: தடைக்குப் பிறகு அதிரடி காட்டிய பிரித்வி ஷா

169
©BCCI

ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கி எட்டு மாதகால போட்டித் தடையிலிருந்து மீண்டு வந்த இந்திய வீரர் பிரித்வி ஷா, நேற்று (17) நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி 39 பந்துகளில் 63 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார். 

செவாக், சச்சின், லாரா என்று வர்ணிக்கப்பட்ட பிரித்வி ஷா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்தொடர்ந்து போர்டர்கவாஸ்கர் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி 70 மற்றும் 33 ஓட்டங்களை எடுத்த நிலையில், கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து அவர் வெளியேறினார்.

மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான பிரித்வி ஷா, இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார் என பலர் பாராட்டினர். சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரை 2 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி 237 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும் அவர் அடித்துள்ளார்.

இதனிடையே இந்த வருடம் நடைபெற்ற .பி.எல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி 16 போட்டிகளில் 353 ஓட்டங்களை குவித்தார்.

இதனையடுத்து, சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் விளையாடுவதற்காக, கடந்த பெப்ரவரி மாதம் பிரித்வி ஷாவுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தை பிரித்வி ஷா உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு முன் திகதியிட்டு 8 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடை (ஜூலை மாதம்) விதிக்கப்பட்டது. இதனால் அவருக்கு எந்தவொரு உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை

இரட்டைச் சதங்களில் பிராட்மனை முந்திய மயங்க் அகர்வால்

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ……

இந்த நிலையில், பிரித்வி ஷாவின் தடைக்காலம் 17ஆம் திகதியோடு முடிவுக்கு வந்தது. இதற்கிடையே தற்போது முஷ்டாக் அலி டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை அணி சுப்பர் லீக் ஆட்டங்களுக்கான அணியை அறிவித்திருந்ததுடன், 20 வயதான பிரித்வி ஷாவும் அந்த அணியில் இடம் பெற்றார்.

இதனையடுத்து நேற்று (17) அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியில் பிரித்வி ஷா  களமிறங்கினார்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அசாம் அணி முதலில் பந்துவீசியது. இதன்படி களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில்விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்களைக் குவித்தது.

ஜெய் பிஸ்தாவுக்குப் பதிலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய பிரித்வி ஷா 63 ஓட்டங்களையும் (39 பந்துகள்), ஆதித்யா தாரே 82 ஓட்டங்களையும் (48 பந்துகள்) விளாசினர்.  

அடுத்து களமிறங்கிய அசாம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 123 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன்படி, மும்பை அணி 4 புள்ளிகளைப் பெற்று டி பிரிவில் 24 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது

போட்டித் தடைக்குப் பிறகு களமிறங்கிய இப்போட்டியில் 32 பந்துகளில் தன்னுடைய அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த பிரித்வி ஷா, தனது துடுப்பு மட்டடையை உயர்த்தி பிடித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

டெஸ்ட் அரங்கில் முரளிதரனுக்கு இணையான சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஷ்வின்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மொமினுல் ஹக்கின் விக்கெட்டை ………

இதேநேரம், போட்டியின் பிறகு கருத்து தெரிவித்த பிரித்வி ஷா, ”முடிந்த வரை அதிகமான ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு அளிப்பதில் தான் இப்போது எனது முழு கவனமும் உள்ளது. தொடர்ந்து ஓட்டங்களைக் குவிப்பது எனது வேலை. மீண்டும் என்னை இந்திய அணிக்கு தேர்வு செய்வது, தேர்வாளர்களின் முடிவை பொறுத்தது.

எனது வாழ்க்கையில் இப்படியொரு சம்பவம் (ஊக்கமருந்து சர்ச்சையால் 8 மாதம் தடை) நடக்கும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. இதனால் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். முதல் 20-25 நாட்கள் இந்த தவறு எப்படி நடந்தது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தேன். ஒவ்வொரு நாட்களும் கடினமாக அமைந்தன. இப்போது அவை எல்லாம் கடந்து விட்டன. இந்த அனுபவத்தில் இருந்து நிறைய கற்று இருக்கிறேன்” என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<