இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிராஸ் தீவில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
முதல் இனிங்ஸில் இந்தியா 353 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இனிங்ஸில் 225 ஓட்டங்கள் சேர்த்தது. 128 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இனிங்ஸில் ஆடிய இந்திய அணி 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 217 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 346 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவின் பந்து வீச்சைத் தாக்கு பிடிக்க முடியமால் 108 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் இந்தியா 237 ஓட்டங்களால் அபரா வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-0 என கைப்பற்றியது.
போட்டி இவ்வாறு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நேற்றைய முன்தினம் 4-வது நாளில் இந்தியா துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தது. மூன்று விக்கெட்டுக்களை இழந்து இந்தியா திணறும்போது அஜின்கியா ரஹானேவுடன் ரோஹித் ஷர்மா நிலைத்து நின்று விளையாடினார்.
அப்போது ரோஹித் ஷர்மாவை டேரன் பிராவோ சீண்டிக் கொண்டே இருந்தார். ரோஹித் ஷர்மா பதிலுக்கு ஏதும் கூறவில்லை. அதன்பின் நேற்றுக் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.
346 வெற்றி இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி சென்றது. இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் விக்கெட்டுகள் சரிந்தது. இசாந்த் சர்மா பந்தில் சாமுவேல்ஸ் கிளீன் போல்டானார். மறுமுனையில் டேரன் பிராவோ துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். இவரிடம் ரோஹித் ஷர்மா ஏதோ கூறினார்.
அப்போது பிராவோ ரோஹித் ஷர்மாவைத் தள்ளிவிட்டார். உடனே, ரோஹித் ஷர்மா தன் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் பிராவோவை தாக்கினார். இதனால் இருவருக்கும் இடையில் வார்த்தை போர் மூண்டது.
உடனே, விராத் கொஹ்லி மற்றும் நடுவர்கள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தனர். இவர்களது செயல் வீரர்களின் நன்னடத்தை வதிமுறைக்கு எதிராக இருந்ததாக போட்டி நடுவரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இருவரும் தவறு செய்தது தெரியவந்ததால் இந்த டெஸ்டின் சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் இருவருக்கும் அபராதமாக விதிக்கப்பட்டது.