வெளிப்புற பயிற்சி மேற்கொண்ட ஷர்துல் தாகூர் மீது பிசிசிஐ அதிருப்தி

245

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்களுடைய பயிற்சியை நிறுத்தி வைத்திருந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் தன்னுடைய வெளிப்புற பயிற்சியை நேற்றுமுன்தினம் (23) தொடங்கியுள்ளார்.  

கொரோனாவினால் இலங்கை – இந்தியா தொடர் ரத்தாகுமா?

இதன்படி, சில உள்நாட்டு வீரர்களுடன் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள போய்சரில் உள்ள ஒரு உள்ளூர் மைதானத்தில் அவர் பயிற்சி பெற்றார்

கொரோனா வைரஸ் பொது முடக்கம் காரணமாக கடந்த 2 மாதங்களாக இந்தியாவில் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதற்கான பயிற்சிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது

குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடக்க வேண்டிய .பி.எல் தொடரும் கால வரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் 4ஆவது முறையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, பல்வேறு தளர்வுகளும், பல விடயங்களில் மாநில அரசுகளே அனுமதியை வழங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி, மகாராஷ்டிராவில் சிவப்பு மண்டலம் தவிர மற்ற இடங்களில் தேசிய விளையாட்டு வீரர்கள் முறையான பாதுகாப்புகளுடன் பயிற்சி எடுக்க அனுமதி வழங்கப்பட்டது

இதையடுத்து மகாராஷ்டிராவின் பல்கார் மாவட்டத்தில் உள்ள தலுகா விளையாட்டு சங்கம் தங்களது பயிற்சியைத் தொடங்கியது

மும்பையில் இருந்து 110 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இந்தச் சங்கத்தின் மைதானத்தில் நேற்றுமுன்தினம் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தகூர் பயிற்சி எடுத்தார்.

பயிற்சி எடுக்க வந்த வீரர்கள் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்ட தங்களின் சொந்த பந்துகளை கொண்டு வந்திருந்தனர். அவ்வாறு கொண்டு வரப்பட்ட பந்துகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன

அத்துடன் வீரர்களின் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பார்வையாளர் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் பாதுகாப்பிற்காக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.  

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பயிற்சி எடுத்தது தொடர்பாக பேசிய தாகூர், ”2 மாதங்களுக்குப் பின்னர் இன்று பயிற்சி செய்துள்ளோம். இது மிகவும் நன்றாக மற்றும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது என்றார்.   

இதேவேளை, அனுமதியின்றி வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்டதால் ஷர்துல் தாகூர் மீது பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பி.சி.சி.. ஒப்பந்தத்தில் உள்ள அவர் கிரிக்கெட் சபையிடம், எந்தவித அனுமதியும் பெறாமல் வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிருப்தி அடைந்துள்ளதாக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய – தென்னாபிரிக்க T20 தொடர் ஒகஸ்டிலா??

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது ஷர்துல் தாகூர் கிரிக்கெட் சபையிடம் அனுமதி பெறாமல் வெளிபுறப் பயிற்சியில் ஈடுபட்டது துரதிர்ஷடவசமானது. ஒப்பந்த வீரர்களை நாங்கள் வெளிப்புற பயிற்சிக்கு அனுமதிக்கவில்லை. அவராகவே சென்று பயிற்சியில் ஈடுபட்டது வருத்தமளிக்கிறது. இது நல்ல முடிவு அல்ல” என்றார்.

இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷர்துல் தாகூர், இறுதியாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

முன்னதாக இந்திய வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி, தனது சொந்த பண்ணை நிலத்தில் வெளியே பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார்.  

அதேபோல, இந்திய அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான வொஷிங்டன் சுந்தரும், சென்னையில் உள்ள மைதானத்தில் தனது அப்பாவின் வழிகாட்டலுடன் கிரிக்கெட் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை, இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் ப்ரோட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தங்கள் உள்ளூர் மாவட்ட மைதானத்தில் தனிப்பட்ட பயிற்சிக்குத் திரும்பியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<