ஜோ ரூட்டை விமர்சித்த ஷனோன் கேப்ரியல் மீது ஐ.சி.சி அதிரடி நடவடிக்கை

402
Image Courtesy - AFP

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்ட் லூசியாவில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட்டை தன்பாலின உறவை விமர்சிக்கும் வகையில் பேசிய மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளரான ஷனோன் கேப்ரியலுக்கு அடுத்துவரும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தரவிட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற 3 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடர் தோல்வியால் டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்துக்கு பாரிய பின்னடைவு

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடரை….

இந்த நிலையில், போட்டியின் 3 ஆவது நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். எனினும், மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் துள்ளியமாக பந்து வீசினார். ஆனால் ஜோ ரூட் அந்த பந்துகளில் ஆட்டமிழக்காமல் தப்பி சதமடித்து அசத்தினார்.

இதனால் விரக்தியடைந்த கேப்ரியல் ஜோ ரூட்டை பார்த்து முனுமுனுத்தார். போட்டியை தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர்களுக்கு அவர் ஏதோ திட்டினார் என்பது தெரிந்தது. ஆனால் என்ன வார்த்தை சொல்லி திட்டினார் என்பது புரியவில்லை.

ஆனால் ஜோ ரூட், ஷனோன் கேப்ரியலிடம் இவ்வாறு கேலி செய்ய வேண்டாம். தன்பாலின உறவாளராக இருப்பதில் தவறில்லை என்று கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியது.

எனினும், இத்தகைய ஒரு கருத்தை ஜோ ரூட் கூறுவதற்குக் காரணமான ஷனோன் கேப்ரியலின் வசை என்னவென்று தெரியவில்லை. உடனே கள நடுவர்களான குமார் தர்மசேன மற்றும் ரோட் டக்கர் ஆகியோர் ஷனோன் கேப்ரியலை எச்சரித்து இருந்தனர்.

இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஜோ ரூட் இது பற்றி பெரிதாகக் கவலைப்படாமல், சில வேளைகளில் மைதானத்தில் சில வீரர்கள் ஆவேசமாக ஒருசில வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தி பிறகு அதற்காக வருத்தப்படுவார்கள். ஷனோன் கேப்ரியல் ஒரு உணர்ச்சிவசப்படும் வீரர். ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்ல தன்னால் முடிந்தது அனைத்தையும் செய்வார். அதுமட்டுமின்றி, அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், இந்தத் தொடர் அவருக்கு நன்றாக அமைந்தது. அதனால் அவர் கொஞ்சம் கர்வமாகவே செயல்பட்டார். இதில் தவறொன்றுமில்லை. மைதானத்தில் வைத்து கூறுவது களத்தோடு போக வேண்டும். பெரிது படுத்தக் கூடாது என அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, மேற்கிந்திய தீவுகளின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளர் ரிச்சர்ட் பைபஸ் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், என்னிடம் புகார் எதுவும் வரவில்லை, ஆனால் ஷனோன் கேப்ரியலின் நடத்தை முறையற்றதாக இருந்தால் நிச்சயம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்  என்று கூறியுள்ளார்.

இதேவேளை, கேப்ரியலுக்கு மைதானத்தில் வைத்து கள நடுவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தாலும், ஐ.சி.சி இன் நடத்தை விதிகளின் 2.13 சரத்தின் கீழ் ஷனோன் கேப்ரியலுக்கு எதிராக நடுவர்கள் போட்டியின் பிறகு குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர். சர்வதேச போட்டியொன்றின் போது வீரர், போட்டி மத்தியஸ்தர் மற்றும் கள நடுவர்களை தனிப்பட்ட முறையில் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், விமர்சிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்த மடவளை வேகப்புயல் சிராஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால பின்னடைவுகளுக்கு…….

ஒருவேளை ஸ்டம்ப் மைக்கில், ஷனோன் கேப்ரியலின் பேச்சு பதிவாகியிருந்தால் ஐசிசி இன் ஒழுங்கு நடவடிக்கைக்கு கேப்ரியல் ஆளாகியிருப்பார். எனினும் கள நடுவர்களின் முறைப்பாட்டுக்கு அமைய போட்டி மத்தியஸ்தர் ஜெப் குரோவ் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில், ஷனோன் கேப்ரியலுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 75 சதவீதத்தை அபராதமாக விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், ஐ.சி.சி இன் வீரர்களுக்கான ஒழுக்க விதிமுறைகளின்படி பிரிவு – 2 ஐ மீறிய குற்றச்சாட்டில் 3  தகுதியிழப்பு புள்ளிகளுடன் மொத்தமாக 8 புள்ளிகளும் வழங்கப்பட்டது. இதன்படி, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட், 4 ஒருநாள் அல்லது டி-20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்ப்டும்.

இந்த நிலையில், அடுத்த வாரம் பார்படோஸில் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடரிற்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெற்ற 30 வயதான ஷனோன் கேப்ரியலுக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 4 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட முடியாது.

இது இவ்வாறிருக்க, இதற்கு முன் நடைபெற்ற இரண்டு முக்கிய சம்பவங்களில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஷனோன் கேப்ரியல் 5 தகுதியிழப்பு புள்ளிகளைப் பெற்றிருந்தார்.

இதில் 2017 இல் பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதன் தலைவர் சர்பராஸ் அஹமட்டுடன் இடம்பெற்ற வாக்குவாதம் மற்றும் கடந்த வருடம் பங்களாதேஷில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அந்த அணி வீரர் இம்ருல் கைஸுடன் இடம்பெற்ற வாக்குவாதம் ஆகிய சம்பவங்களுக்கு எதிராக ஐ.சி.சி இனால் ஷனோன் கேப்ரியலுக்கு தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதே சம்பவத்தை ஒத்தவகையில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் கடந்த மாதம் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணித் தவைர் சர்பராஸ் அஹமட் தென்னாப்பிரிக்க வீரர் பெஹ்லுக்வாயோவை பார்த்து நிறவெறி தொடர்பான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து அவருக்கு 4 போட்டிகளில் விளையாடுவதற்கு ஐ.சி.சி இனால் தடைவிதிக்கப்பட்டது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<