நடைபெற்று முடிந்த 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தின் இரண்டாவதும், கடைசி தினமான ஞாயிற்றுக்கிழமை (31) ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் குமார் சண்முகேஸ்வர்ன தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
அத்துடன், ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியில் கிழக்கு மாகாண வீரர் மொஹமட் நிப்ராஸ் வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்களுக்கான 10 அம்சப் போட்டிகளில் யாழ் வீரர் ஆர். சதீஷான் மற்றும் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் என். டக்சிதா ஆகிய இருவரும் வெண்கலம் பதக்கங்களையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> கோலூன்றிப் பாய்தல் சம்பியனை வீழ்த்தி தங்கம் வென்ற புவிதரன்
எவ்வாறாயினும், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் பங்குகொண்ட தமிழ் பேசுகின்ற வீரர்கள் 3 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.
சண்முகேஸ்வரனுக்கு ஹெட்ரிக் தங்கம்
ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் அண்மைக்காலமாக பதக்கங்களை வென்று வருகின்ற ஹட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன், தொடர்ச்சியாக 3ஆவது தடவையாக தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற குறித்த போட்டியை அவர் 30 நிமிடங்கள் 43.35 செக்கன்களில் நிறைவு செய்தார்.
இறுதியாக 2019இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், குறித்த போட்டியில் சண்முகேஸ்வரனுக்கு போட்டியைக் கொடுத்த இலங்கை விமானப் படையைச் சேர்ந்த எம்.சமரகோன் 31 நிமிடங்கள் 17.37 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வெல்ல, இலங்கை இராணுவத்தின் டி.குணசேகர (31 நிமி. 23.47 செக்.) வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, குறித்த போட்டியில் இலங்கை விமானப் படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட மலையகத்தைச் சேர்ந்த எம். சிவராஜன் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட கிழக்கு மாகாண வீரரான மொஹமட் நிப்ராஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டித் தூரத்தை அவர் 3 நிமிடங்கள் 50.25 செக்கன்களில் நிறைவு செய்தார்.
அத்துடன், அவர் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் முதல் தடவையாக பதக்கம் வென்று அசத்தினார்.
இதனிடையே, குறித்த போட்டியில் இலங்கை பொலிஸ் வீரர் ஹேமன்த குமார தங்கப் பதக்கத்தையும், இலங்கை விமானப் படை வீரர் எல்.பிரதாப வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
நட்சத்திர வீராங்கனை அனித்தா ஜெகதீஸ்வரனுக்குப் பிறகு பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணம் சார்பில் அண்மைக்காலமாக ஜொலித்து வருகின்ற டக்சிதா இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 3.40 மீட்டர் உயரத்தைத் தாவியிருந்தார்.
கொரோனா வைரஸ் மற்றும் ஊடரங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு பயிற்சிகளிலும் ஈடுபடாத அவர், குறுகியகால பயிற்சியுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்டு பதக்கம் வென்று அசத்தினார்.
எவ்வாறாயினும், இறுதியாக கடந்த 2019இல் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இதே அளவு உயரத்தைத் தாவி அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கையின் தேசிய சம்பியனான சச்சினி பெரேரா 3.57 மீட்டர் உயரத்தைத் தாவி, புதிய இலங்கை சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், இமாஷா உதானி சில்வா 3.50 மீட்டர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
ஆண்களுக்கான டெகத்லன் (ஏழு அம்சப் போட்டி) போட்டியில் பங்குகொண்ட யாழ் வீரர் ஆர். சதீஷான் வெண்கலப் பதக்கத்தை வென்றார். குறித்த போட்டியில் 5,406 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட அவர், முதல் முறையாக தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்று அசத்தினார்.
இதனிடையே குறித்த போட்டியில் 6,645 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை விமானப் படை வீரர் தனுஷ்க பெரேரா தங்கப் பதக்கத்தையும், இலங்கை இராணுவத்தின் டி.பெர்னாண்டோ (5,651 புள்ளிகள்) வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<