டெல்லி கெபிடல்ஸின் உதவிப் பயிற்சியாளராக ஷேன் வொட்சன்

Indian Premier League 2022

257

டெல்லி கெபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷேன் வொட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 15ஆவது அத்தியாயம் எதிர்வரும் 26ஆம் திகதி மும்பையில் ஆரம்பமாகவுள்ளது. இதில் டெல்லி கெபிடல்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சம்பியனான மும்பை இந்தியன்ஸை 27ஆம் திகதி எதிர்கொள்கிறது.

இந்த தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் தங்களது குழுவில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பல அணிகளும் தங்களது பயிற்சியாளர்களை மாற்றி வருகின்றன.

IPL தொடரில் இடம்பெற்றுள்ள முக்கிய அணிகளில் ஒன்றான டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் பணியாற்றுகிறார்.

அந்த அணியில் பிரவீன் ஆம்ரே, அஜித் அகர்கர் ஆகியோர் உதவிப் பயிற்சியாளர்களாகவும், ஜேம்ஸ் ஹோப்ஸ் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் உள்ளார்கள்

இந்த நிலையில், டெல்லி கெபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக அவுஸ்திரேலிய முன்னாள் சகலதுறை வீரர் ஷேன் வொட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் IPL போட்டிகளில் முதல் முறையாக பயிற்சியாளராக பணியாற்றுவது தொடர்பில் ஷேன் வொட்சன் கூறுகையில்,

உலகின் சிறந்த T20 லீக் தொடர்களில் ஒன்றாக விளங்கும் IPL தொடரில் எனக்கு ஒரு வீரராக நம்பமுடியாத நினைவுகள் இருக்கின்றன.

தற்போது ரிக்கி பொண்டிங்கின் தலைமையின் கீழ் பயிற்சியாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அற்புதமான தலைவராக விளங்கிய அவர் தற்போது உலகின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக உள்ளார். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள முடியும். அதனை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்” என தெரிவித்தார்.

IPL வரலாற்றில் ஒருமுறை கூட சம்பியன் பட்டத்தை வென்றிராத டெல்லி கெபிடல்ஸ் அணி, கடந்த சில ஆண்டுகளாக நன்றாக ஆடி வருகிறது. ரிக்கி பொண்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு, அவரது வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படுகிறது.

அவரது பயிற்றுவிப்பில் ஏற்கனவே டெல்லி அணி இறுதிப்போட்டி, அரை இறுதி வரை சென்றுள்ளது. இந்த நிலையில், ஷேன் வொட்சனும் இணைந்திருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. இதன் மூலம் இம்முறை IPL தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள அணியாகவும் டெல்லி உருவெடுத்துள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்காக 59 டெஸ்ட், 190 ஒருநாள், 58 T20i போட்டிகளில் விளையாடியுள்ள 40 வயதான ஷேன் வொட்சன், IPL தொடரில் 2008ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பிறகு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அங்கம் வகித்தார்.

அடுத்து சென்னை சுபர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்த அவர் அந்த அணி 2018ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்காற்றினார்.

145 IPL போட்டிகளில் ஆடி 3874 ஓட்டங்களைக் குவித்துள்ள ஷேன் வொட்சன், 92 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இதனிடையே, 2020ஆம் ஆண்டு IPL உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஷேன் வொட்சன் விடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<