இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் லீக் தொடரில், லண்டன் ஸ்பிரிட்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவரும் ஷேர்ன் வோர்னுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (01) லண்டன் ஸ்பிரிட்ஸ் அணி, சௌதெர்ன் பிரேவ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தது. இந்த போட்டி தினமான நேற்று காலை ஷேர்ன் வோர்ன் சுகயீனமுற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
>> இலங்கை வீரர்களுக்கான T20 தொடர் அடுத்த வாரம்
இந்தநிலையில், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஷேர்ன் வோர்னுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. எனினும், குழாத்தின் எந்த வீரருக்கும் கொவிட்-19 தொற்று இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்பதுடன், நேற்றைய தினம் லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்கான போட்டி நடைபெற்று முடிந்திருந்தது.
எவ்வாறாயினும், இந்தப்போட்டியில் தலைமை பயிற்றுவிப்பாளரான ஷேர்ன் வோர்ன் அணியுடன் இணைந்திருக்கவில்லை. இந்தநிலையில், அவர் மற்றுமொரு PCR பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுக்கும் இரண்டாவது தலைமை பயிற்றுவிப்பாளராக ஷேர்ன் வோர்ன் மாறியுள்ளார். இதற்கு முன்னர், ட்ரெண்ட் ரொக்கட்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் எண்டி பிளவர் கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்திருந்ததுடன், அந்த அணியின் கடைசி மூன்று போட்டிகளிலும் அவர் அணியுடன் இணைந்திருக்கவில்லை.
இதேவேளை, ஷேர்ன் வோர்ன் தலைமைத்துவத்தின் கீழான, லண்டன் ஸ்பிரிட்ஸ் அணியானது, இதுவரை ஒரு போட்டியிலும் வெற்றிபெறவில்லை என்பதுடன், புள்ளிப்பட்டியில் இறுதி இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<