சுழல் பந்துவீச்சில் முத்தையா முரளிதரனிடம் உள்ள பன்முகத்தன்மை அவுஸ்திரலியாவின் முன்னாள் சுழல் பந்துவீச்சு ஜாம்பவனான ஷேன் வோர்னிடம் இருக்கவில்லை என இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
1990 மற்றும் 2000 ஆகிய காலப்பகுதியில் கிரிக்கெட் உலகில் முன்னணி வீரர்களாக வலம்வந்த இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் ஆகிய இருவரும் சுழல் பந்துவீச்சில் தமது ஆதிக்கத்தை தக்கவைத்திருந்தனர்.
சுழல் பந்துவீச்சில் எதிரணி வீரர்களுக்கு எப்பொழுதும் தலையிடியாக இருந்த இவ்விரண்டு வீரர்களும் தான் இன்று வரை கிரிக்கெட் உலகில் சாதனை பலவற்றை நிகழ்த்திய பந்துவீச்சாளர்களாகவும் வலம் வருகின்றனர்.
துடுப்பாட்டத்தில் மஹேல செதுக்கிய சிற்பங்கள்
மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளராக ஷேன் வோர்ன் சாதனைகள் படைக்க, மறுபுறத்தில் விரல்களால் பந்தினை சுழற்றி முத்தையா முரளிதரன் சாதனை படைத்தார்.
இறுதியில் இவ்விரு வீரர்களும் தங்களது ஓய்வுக்கு முன் பல உலக சாதனைகளையும் நிலை நாட்டி கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்திருந்தார்கள்.
இதில், முத்தையா முரளிதரன் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பந்துவீச்சாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச விக்கெட்டுக்கான உலக சாதனையை தனது பெயரின் கீழ் பதிவுசெய்தார்.
அந்தப் பட்டியலில் ஷேன் வோர்ன் 708 விக்கெட்டுக்களுடன் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 121
அத்துடன், இவ்விரண்டு வீரர்களும் தங்களது நாடுகள் ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற உலகக் கிண்ண அணியிலும் இடம்பிடித்து விளையடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஷேன் வோர்ன் மற்றும் முத்தையா முரளிதரன் இருவருக்கும் இடையிலான வித்தியாசம் தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன, ESPNCricInfo இணையத்தளத்தில் சன்ஜேய் மன்ஜ்ரேக்காருடன் இடம்பெற்ற நேர்காணலில் கருத்து தெரிவிக்கையில்,
“முரளிதரன் மிகவும் சிறந்த பந்துவீச்சாளர். உலகின் ஏனைய பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் அவர் வித்தியாசமானவர். அதிலும் குறிப்பாக, பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் முரளிதரனின் பந்துவீச்சில் காணப்பட்ட பன்முகத்தன்மை ஷேன் வோர்னிடம் இல்லை.”
“முரளிதரன் எப்போதும் அவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றி நன்கு அறிந்து வைத்து பந்துவீசினார். துடுப்பாட்ட வீரரொருவரை எப்படி பலவீனப்படுத்த முடியும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தார்.”
தசுன் ஷானக்கவின் அதிரடியில் வீழ்ந்த மெண்டிஸின் அணி
“அதிலும் குறிப்பாக, முரளிதரன் யாராவது ஒரு துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்வதற்கு 10 வருடங்கள் காத்திருக்க வேண்டுமாயின், அதையும் செய்வதற்கு தயாராக உள்ளார்.”
“ஷேன் வோர்ன் மற்றும் முரளிதரன் ஆகிய இருவரும் முற்றிலும் வேறுபட்ட நபர்கள். ஷேன் வோர்ன் ஒரு நிலையான மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர். உன்னால் முடியுமானால் எனது பந்தை எதிர்கொள். நான் உனது விக்கெட்டை உத்தியொன்றை கையாண்டு தான் எடுப்பேன் என்ற எண்ணத்துடன் அவர் எப்போதும் பந்துவீசுவார். எனினும், முரளிதரன் பந்துவீச்சில் காட்டிய பன்முகத்தன்மை தன்னிடம் இல்லை என்பது அவருக்குத் தெரிந்திருக்கலாம்.” என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தற்போதைய துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் திறமைகள் தொடர்பில் மஹேல கருத்து தெரிவிக்கையில்,
“தற்போதைய துடுப்பாட்ட வீர்ரகள் முன்னைய காலங்களில் உள்ள வீரர்களைக் காட்டிலும் திறமையானவர்களாக இருப்பதால் இந்த தசாப்தத்தில் உள்ள பந்துவீச்சாளர்களுக்கு ஷேன் வோர்ன் மற்றும் முரளிதரனின் சாதனைகளை நெருங்குவது என்பதே மிகவும் கடினம்.”
”இன்றைய பந்துவீச்சாளர்களுக்கு முன்னாள் பந்துவீச்சாளர்களால் எடுத்த விக்கெட்டுக்கள் அளவுக்கு விக்கெட்டுகளை எடுக்க முடியுமா என்று நாங்கள் உறுதியாக சொல்ல முடியாது.”
”ஆனால் பெரும்பாலும், பந்து வீச்சாளர்கள் முன்பை விட வலுவான துடுப்பாட்ட வரிசைக்கு எதிராக பந்துவீச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனவே முன்னாள் பந்துவீச்சாளர்களைப் போல அவர்களால் அதிக விக்கெட்டுகளைப் பெற முடியவில்லை என்றால், அவர்கள் பலவீனமான பந்து வீச்சாளர்கள் என்று அர்த்தமல்ல.”
”தற்போது கிரிக்கெட் உலகில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த முதல் 10 வீரர்களைப் பார்த்தால், அவர்கள் அனைவரும் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் விளையாடிய வீரர்கள்.”
”முரளிதரன், ஷேன் வோர்ன், கிளென் மெக்ராத், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் சக்லைன் முஷ்டாக் ஆகியோர் இதற்கு எடுத்துக்காட்டுக்கள். அவர்கள் கைப்பற்றியுள்ள விக்கெட்டுகளின் எண்ணிக்கையால் அவர்களின் திறமை நிரூபிக்கப்படுகிறது.” என மஹேல ஜயவர்தன குறிப்பிட்டார்.
21ஆம் நூற்றாண்டின் மதிப்புமிக்க வீரராக முரளிக்கு மகுடம்
2007 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தில் மஹேல ஜயவர்தன இலங்கை அணிக்காக விளையாடியிருந்த போதிலும், இலங்கை அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியைத் தழுவியிருந்தது.
இதில் குறிப்பாக 2007 உலகக் கிண்ணத்தில் மஹேல ஜயவரத்ன தலைமையில் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடிய இலங்கை அணி, அவுஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது.
அத்துடன், 2012 டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், 2014 டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவை வீழ்த்தி சம்பியனாக மகுடம் சூடியது. இந்த இரண்டு உலகக் கிண்ணத்திலும் மஹேல ஜயவர்தன இலங்கை அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு – இது www.hindustantimes.com இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…