தசுன் ஷானக்க மேற்கிந்திய தீவுகள் செல்வது உறுதி

494
AP Photos

இலங்கை T20 அணியின் தலைவரான தசுன் ஷானக்க, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (7) மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகி அங்கிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20 தொடரில் இலங்கை அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட தசுன் ஷானக்க, தனது கடவுச்சீட்டில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாக பெப்ரவரி மாத இறுதிப் பகுதியில் மேற்கிந்திய தீவுகளுக்குப் பயணமான இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணையும் சந்தர்ப்பத்தினை இழந்திருந்தார். 

தொடர்ந்து, இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான T20 தொடர் கடந்த 03ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது. தனது கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணாத தசுன் ஷானக்க இந்த T20 தொடரில் முழுமையாக விளையாடும் வாய்ப்பினை இழந்திருந்ததோடு, இந்த T20 தொடரில் இலங்கை அணியின் தலைவராக அஞ்செலோ மெதிவ்ஸ் நியமனம் செய்யப்பட்டிருந்தார். 

இலங்கை அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கான அனுசரணையாளராக JAT HOLDINGS

தற்போது தனது கடவுச்சீட்டுப் பிரச்சினையினை நிவர்த்தி செய்திருக்கும் தசுன் ஷானக்க, மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிய பின்னர் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையில் நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்குப் பங்களிப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், எதிர்வரும் 10ஆம் திகதி என்டிகுவா நகரில் நடைபெறவுள்ளது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<