2023ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் குஜராத் டைடன்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டிருக்கும் தசுன் ஷானக்க, தனது புதிய IPL அணி குறித்த அனுபவங்களை பகிர்ந்திருக்கின்றார்.
இலங்கை கிரிக்கெட் அணியினை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் வழிநடாத்தும் தசுன் ஷானக்கவினை குஜராத் டைடன்ஸ் தமது குழாத்தில் இருந்த கேன் வில்லியம்சனுக்கு உபாதை ஏற்பட, அவரின் பிரதியீட்டு வீரராக இணைத்திருந்தது.
>> சாம்சன், ஹெட்மேயர் அதிரடியில் ராஜஸ்தான் வெற்றி
அந்தவகையில் நியூசிலாந்து சுற்றுப் பயணத்தின் பின்னர் குஜராத் டைடன்ஸ் அணியுடன் நேரடியாக தசுன் ஷானக்க இணைந்து கொண்டார். இந்த நிலையில் தனக்கு IPL தொடரில் கிடைத்த வாய்ப்பு குறித்து ஷானக்க இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
”இது (IPL) உலகில் உள்ள பிரதான லீக் கிரிக்கெட் தொடராக இருக்கின்றது. நான் நீண்ட காலம் இந்த தொடரில் தெரிவு செய்யப்படுவதற்காக காத்திருந்தேன். இப்போது தெரிவு செய்யப்பட்டது அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களில் நான் சிறப்பாக செயற்பட்டிருந்தேன். இலங்கை கிரிக்கெட் அணியும் சிறப்பாக பணிகளைச் செய்திருந்தது. இங்கே எனக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கான காரணமாக இதனையே கருதுகின்றேன்.”
அதேவேளை, IPL தொடரில் இணைந்த போதும் இன்னும் தனது முதல் போட்டியில் விளையாடாத ஷானக்க, தனக்கான அறிமுகத்தினை எதிர்பார்த்து காத்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
”நான் மிகப் பெரும் இரசிகர் பட்டாளத்திற்கு மத்தியில் விளையாடுவதனை அதிகம் எதிர்பார்த்திருக்கின்றேன். ஒவ்வொரு போட்டிக்கும் சுமார் ஒரு இலட்சம் பேர் பார்வையாளர்களாக வருகின்றனர். எனவே, எனக்கு குஜராத் டைடன்ஸ் அணியில் இணைவதற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.”
மறுமுனையில் குஜராத் டைடன்ஸ் அணியின் தலைவராக இருக்கும் ஹார்திக் பாண்டியா உடனான அனுபவம் பற்றியும் தசுன் ஷானக்க குறிப்பிட்டிருந்தார்.
”எனக்கு ஹார்திக் பாண்டியாவினை கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாட ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து தெரியும். 2016ஆம் ஆண்டு நாங்கள் இந்தியாவிற்கு மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தோம். அதில் முதல் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக வெற்றி பெற்றோம். அப்போட்டியில் நான் மூன்று விக்கெட்டுக்களை சாய்த்திருந்தேன். அதில் ஹார்திக்கின் விக்கெட்டும் அடங்கும். எனவே அவர் நீண்ட பாதையொன்றை கடந்தே இப்போது (ஒரு சிறந்த நிலைக்கு) வந்திருக்கின்றார். எனவே அவருக்கு நான் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.”
>> ஒருநாள் போட்டிகள் போன்றே டெஸ்ட் ஆடும் குசல் மெண்டிஸ்
மறுமுனையில் அணியின் பயிற்சியாளராக செயற்படும் அஷிஷ் நெஹ்ரா குறித்தும் கருத்து வெளியிட்ட ஷானக்க, அவரின் கீழ் பயிற்சி பெறுவது சிறப்பான விடயமாகும் என்று கூறியிருந்தார்.
”இந்திய ஆடுகளங்கள் சிறப்பானவை. எனவே வீரர்கள் பற்றி அறிவதற்காக பயிற்சியாளர்கள் சிறந்த கண்ணோட்டத்துடன் காணப்பட வேண்டும். அவ்வாறான கண்ணோட்டம் ஒன்றை ஆஷிஷ் நெஹ்ரா கொண்டிருக்கின்றார் என நான் நினைக்கிறேன். அவர் சாந்தமான மனநிலை கொண்ட ஒருவர். இந்திய அணிக்காக 20 வருடங்கள் ஆடிய பின்னர் அவருக்கு வீரர் ஒருவரின் நேர்மறை, எதிர்மறை விடயங்கள் பற்றி தெரியும்.”
இதேவேளை, IPL புள்ளிப்பட்டியலில் தற்போது மூன்றாம் இடத்தில் காணப்படும் தொடரின் நடப்புச் சம்பியன்களான குஜராத் டைடன்ஸ் அணி தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை (22) லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியினை எதிர்கொள்கின்றது.
இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<