இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா

SLC 64th Annual General Meeting

46
Shammi Silva

2025-2027 காலப்பபுகுதிக்கான இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் போட்டியின்றி தெரிவாகியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் 64ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் நேற்று (31) நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஷம்மி சில்வா நான்காவது தடவையாக மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 முதல் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மாலனி குணரத்ன தலைமையிலான தேர்தல் குழுவால் ஷம்மி சில்வாவின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஷிரோமி பெரேரா, இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரிகள் (ஓய்வு பெற்ற) சுனில் எஸ். சிறிசேன, சோமரத்ன விதானபத்திரன மற்றும் ஆர்.எம்.சி.எம். ஹேரத் ஆகியோர் நியமனக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாகப் பணியாற்றினர்.

இலங்கை கிரிக்கெட் சபையின் அரசியலமைப்பு கடந்த டிசம்பரில் திருத்தப்பட்டது. அதுவரை இருந்த வாக்குகளின் எண்ணிக்கை கடந்த டிசம்பரில் 147 இல் இருந்து 60 ஆகக் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற தேர்தலில், 2025-2027 காலப்பபுகுதிக்கான நிர்வாகக் குழுவின் பதவிகளுக்கு மேலும் ஆறு பேர் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி, ஜயந்த தர்மதாச (உப தலைவர்), ரவின் விக்ரமரத்ன (உப தலைவர்), பந்துல திஸாநாயக்க (செயலாளர்), சுஜீவ கொடலியத்த (பொருளாளர்), க்ரிஷாந்த கபுவத்த (உப செயலாளர்) மற்றும் லசந்த விக்கிரமசிங்க (உதவிப் பொருளாளர்). ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகக் குழுவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் மொஹான் டி சில்வா கடந்த டிசம்பபர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்ததால், பந்துல திசாநாயக்க செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதனையடுத்து செயலாளருக்கான பணிகளை மேற்பார்வையிட்ட பொறுப்பேற்ற முன்னாள் உதவி செயலாளர் க்ரிஷாந்த கபுவத்த, மீண்டும் உதவி செயலாளர் பதவிக்கு தெரிவாகினார்.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<