SLC தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு

285

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்படி, 2023 முதல் 2025 வரையான 2 ஆண்டு காலப்பகுதிக்கு அவர் தலைவராக செயல்படவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் 62ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை (20) காலை 10 மணியளவில் கொழும்பில் உள்ள ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கை கிரிக்கெட் சபைக்கு 2023-2025 காலப்பகுதிக்கான புதிய அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதில் இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய தலைவர் ஷம்மி சில்வா, ஜயந்த தர்மதாஸ மற்றும் சமந்த தொடன்வல உள்ளிட்டோர் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர்.

எனினும், ஜயந்த தர்மதாஸ மற்றும் சமந்த தொடன்வல ஆகிய இருவரும் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை மீளப் பெற்றதையடுத்து, ஷம்மி சில்வா ஏகமனதாக போட்டியின்றி மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக தெரிவானதுடன், போட்டியின்றி அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.

இதனிடையே, தற்போதைய செயலாளர் மொஹான் டி சில்வா, ரொஷான் இத்தமல்கொட மற்றும் நலின் அபோன்ஸ் ஆகிய மூவரும் செயலாளர் பதவிக்காக போட்டியிட்டனர். எனினும், ரொஷான் இத்தமல்கொட மற்றும் நலின் அபோன்ஸ் ஆகிய இருவரும் செயலாளர் பதவிக்கான வேட்பு மனுவை மீளப் பெற்றதையடுத்து மொஹான் டி சில்வா ஏகமனதாக போட்டியின்றி செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த பதவிக்கு தொடர்ச்சியாக 3ஆவது தடவையாக அவர் தேர்வு செய்யப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர்களாக மீண்டும் ஜயன்த தர்மமதாச மற்றும் ரவீன் விக்ரமரட்ன ஆகிய இருவரும் போட்டியின்றி தெரிவாகினர். உப செயலாளராக கிரிஷான்த கபுவத்த தெரிவாக, பொருளாளராக சுஜீவ கொடலியத்த தெரிவாகினார்.

எனவே, 2023 முதல் 2025 வரையான 2 ஆண்டுகளுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய நிர்வாகிகளாக தெரிவாகிய அனைவரும் ஷம்மி சில்வாவின் தரப்பில் இம்முறை தேர்தலில் போட்டியிட்டிருந்தமை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2023-25 ஆம் ஆண்டிற்கான இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகள்

ஷம்மி சில்வா – தலைவர்

கலாநிதி ஜயந்த தர்மதாச – உப தலைவர்

ரவின் விக்கிரமரத்ன – உப தலைவர்

மொஹான் டி சில்வா – செயலாளர்

சுஜீவ கொடலியத்த – பொருளாளர்

கிரிஷாந்த கபுவத்த – உதவிச் செயலாளர்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<