எதிர்வரும் இரண்டு வருடங்களுக்காக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா, போட்டியின்றி மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
இதற்கு முன்னதாக, இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கே. மதிவாண் தரப்பு தமது வேட்பு மனுவை மீளப் பெற்றதையடுத்து, ஷம்மி சில்வா ஏகமனதாக போட்டியின்றி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலில் இருந்து விலகும் மதிவாணன் தரப்பு
இலங்கையின் கிரிக்கெட் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக ZOOM இணைவழியாக 2021/2023 வரையான காலப்பகுதிக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை இடம்பெற்றது.
இம்முறை தேர்தலில் 144 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றிருந்ததுடன், 8 மாகாண கிரிக்கெட் சங்கங்கள், 44 மாவட்ட கிரிக்கெட் சங்கங்கள், 58 கிரிக்கெட் கழகங்கள், 22 இணை கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் 12 கிரிக்கெட் சங்கங்கள் கையைத் தூக்கி வாக்களிப்பதற்கு தகுதிபெற்றிருந்தன.
முன்னதாக ஷம்மி சில்வா தரப்பினரும், கே. மதிவாணன் தரப்பினரும் இம்முறை கிரிக்கெட் சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
எனினும், மதிவாணன் மதிவாணன் தரப்பினர் போட்டியிடுவதிலிருந்து வாபஸ் பெறுவதாக இலங்கை கிரிக்கெட் தேர்தல் குழுவுக்கு எழுத்துமூலம் நேற்றுமுன்தினம் (18) அறிவித்திருந்தனர்.
இதன்காரணமாக இம்முறை தேர்தலில் மீண்டும் களமிறங்கிய ஷம்மி சில்வா உள்ளிட்ட தரப்பினர் போட்டியின்றி ஏகமனதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவாகினர்.
கொவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கிண்ணம்
இதன்படி, இம்முறை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஷம்மி சில்வா, இரண்டாவது தடவையாகவும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக, 2004இல் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபைத் தேர்தலில் அப்போதைய தலைவராக இருந்த மொஹான் டி சில்வா, போட்டியின்றி ஏகமனதாக தேர்வாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே, சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு ஷம்மி சில்வா போட்டியின்றி இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக மீண்டும் தெரிவாகியமையிட்டு ஷம்மி சில்வா கருத்து தெரிவிக்கையில்,
”இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தமை தொடர்பில் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். கிரிக்கெட் விளையாட்டின் அபிவிருத்திக்காக எனது தலைமையிலான முன்னாள் நிர்வாகம் முன்னெடுத்திருந்த அதிசிறப்புமிக்க சேவைகளை எமக்காக வாக்களித்தவர்கள் நன்கு புரிந்துகொண்டமை இந்த தேர்தல் முடிவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதனிடையே, இம்முறை கிரிக்கெட் சபைத் தேர்தலில் உப தலைவர் பதவிக்கு 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். எனினும், உப தலைவர்களாக மீண்டும் ஜயன்த தர்மமதாச மற்றும் ரவீன் விக்ரமரட்ன ஆகிய இருவரும் போட்டியின்றி தெரிவாகினர்.
Shadow Players திட்டத்தினை ஆரம்பித்துள்ள இலங்கை கிரிக்கெட்
அத்துடன், இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளராக போட்டியின்றி மொஹான் டி சில்வா தெரிவாக, உப செயலாளராக கிரிஷான்த கபுவத்தவும் தெரிவு செய்யப்பட்டனர். இதனிடையே, பொருளாளராக லசன்த விக்ரமசிங்கவும், உப பொருளாளராக சுஜீவ கொடலியத்தவும் தெரிவாகினர்.
இதேவேளை, போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக சமன்த தொடன்வெலவும், கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களாக ஜானக பதிரன மற்றும் நளின் அபோன்சுவும் தெரிவாகினர்.
அத்துடன், நடுவர் சங்கத்தின் தலைவராக பந்துல பஸ்நாயக்க போட்டியின்றி மீண்டும் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<