ஐசிசியின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்ற ஷெமார் ஜோசப்

ICC Player of the Month Award

191

ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதினை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷெமார் ஜோசப் வென்றுள்ளார்.

இதன்மூலம் ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினைப் பெறும் முதல் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. இந்த நிலையில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி பரிந்துரை செய்திருந்தது.

அதன்படி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், இங்கிலாந்தின் ஒல்லி போப் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் இளம் வீரரான ஷெமார் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அதேபோல, ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு அயர்லாந்தின் ஏமி ஹண்டர் மற்றும் அவுஸ்திரேலியா வீராங்கனைகளான பெத் மூனி, அலிசா ஹீலி ஆகியோர் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதை யார் வென்றார்கள் என ஐசிசி நேற்று (13) அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை மேற்கிந்தியத் தீவுகளின் இளம் வீரரான ஷெமார் ஜோசப் வென்றுள்ளார். இவர் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அறிமுகமானர். சர்வதேச அரங்கில் வீசிய தனது முதல் பந்தில் ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்து சாதனை படைத்தார்.

அதன்பின் பிரிஸ்பேனில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது தோல்வியின் விளிம்பில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் வெற்றிபெறவைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறித்த டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை சாய்த்த அவர், ஒட்டுமொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய 2 விருதுகளையும் தட்டிச் சென்றார்.

இ;ந்த நிலையில், அவருக்கு ஜனவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் இந்த விருதினை வெல்லும் முதல் வீரர் எனும் பெருமையையும் ஷெமார் ஜோசப் பெற்றுள்ளார்.

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றமை தொடர்பில் ஷெமார் ஜோசப் கருத்து தெரிவிக்கையில், உலக அரங்கில் இதுபோன்ற விருதினைப் பெறுவதை மிகவும் சிறப்பானதாக உணர்கிறேன். மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் நான் மகிழ்ச்சியோடு விளையாடினேன். அதிலும் குறிப்பாக கபாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானதாக அமைந்தது. அணியை வெற்றி பெறச் செய்வதற்கான விக்கெட்களை எடுப்பது மிகவும் சிறப்பானது. உண்மையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை எனது வாழ்நாளில் மறக்க முடியாது என்றார்.

இதனிடையே, அவுஸ்திரேலியா அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது கால் விரலில் காயத்துக்குள்ளான ஷெமார் ஜோசப்பிற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்ற ILT20 தொடர் மற்றும் பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் ஆகிய 2 தொடர்களிலும் விளையாட முடியாமல் போனது. எவ்வாறாயினும், இவர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடந்த ஜனவரி மாதம் சர்தேச மகளிர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய அயர்லாந்து அணியின் ஏமி ஹண்டர் ஐசிசி இன் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<