பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறைவீரரும் அதன் தலைவருமான சகீப் அல் ஹசன் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.
மெதிவ்ஸ், சந்திமால் சதங்களோடு வலுப்பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாத ஆரம்பத்தில் பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவிருக்கின்றது. இந்த நிலையில் தற்போது தனது கண்ணில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றுக்காக சிகிச்சை பெற்று வரும் சகீப் அல் ஹசன் இதனை அடிப்படையாக வைத்து இலங்கை தொடரில் ஆடுவது தொடர்பில் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாம் அந்த தொடரில் ஆடுகின்றோம். நான் இது தொடர்பில் குறிப்பிட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் அது தொடர்பிலான தீர்மானம் (இலங்கை தொடரில் ஆடுவதா? அல்லது இல்லையா?) மேற்கொள்வேன்.” என சகீப் அல் ஹசன் தான் பேசியிருந்த போது குறிப்பிட்டிருந்தார்.
சகீப் அல் ஹசன் தனது இடது கண்ணில் ஒரு வகையான கோளாறு ஒன்றுக்கு முகம் கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக அவர் தொடர்ச்சியாக சிகிச்சைகளைப் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. சகீப் அல் ஹசனிற்கு இந்த பார்வைப் பிரச்சினை காரணமாக துடுப்பாட்டத்தில் ஈடுபடும் போது பிரச்சினைகள் உருவாகுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த பார்வைப் பிரச்சினை காரணமாக சகீப் அல் ஹசன் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் மற்றும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் என்பவற்றில் ஆடுவதில் சிக்கல்களுக்கு முகம் கொடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை இலங்கை – பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் நடைபெறவுள்ளதோடு, அது மார்ச் 04ஆம் திகதி சில்லேட் நகரில் ஆரம்பமாகுகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<