அடுத்த வாரம் நடைபெறவுள்ள ”தி ஹன்ரட்” கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தில் சுமார் 250 வெளிநாட்டு வீரர்கள் வரை பங்கெடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
>>யாழ்ப்பாணத்தில் களமிறங்கும் 96 உலக சம்பியன்கள்
இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட அணிக்கு 100 பந்துகள் கொண்ட ”தி ஹன்ரட்” கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டில் முதல்முறையாக நடைபெற எதிர்பார்க்கப்பட்ட போதும் கொவிட-19 வைரஸ் அச்சத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த ஆண்டின் ஜூலை மாதம் ”தி ஹன்ரட்” கிரிக்கெட் தொடரினை மீண்டும் புதிதாக நடாத்த எதிர்பார்க்கும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை, அடுத்த வாரம் (பெப்ரவரி 23) இந்த தொடரில் பங்கெடுக்கும் அணிகளில் வெற்றிடமாக இருக்கின்ற இடங்களுக்கு தேவையான உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலத்தினை ஏற்பாடு செய்திருக்கின்றது.
மொத்தம் 8 அணிகள் பங்குபெறுகின்ற இந்த கிரிக்கெட் தொடரின், முதல் வீரர்கள் ஏலம் கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்றிருந்தது. இந்த வீரர்கள் ஏலத்தின் போது அணிகள் ஏற்கனவே தெரிவு செய்த வீரர்களை தமது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் தக்கவைத்துக் கொண்டு புதிய ஏலத்தில் புதிய வீரர்களை தெரிவு செய்ய முடியும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.
புதிய ஏலத்தில் அணிகளின் கொள்வனவிற்கு இந்தியா தவிர்ந்த 13 நாடுகளின் வீரர்கள் வருவதோடு, அதில் தென்னாபிரிக்க அணியின் ககிஸோ றபாடா, குயின்டன் டி கொக் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் கெய்ரொன் பொலார்ட், நிகோலஸ் பூரான் மற்றும் பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன் ஆகியோர் முக்கியமானவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
>>பங்களாதேஷ் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் எப்போது?
அதேநேரம், அணிகள் ஏற்கனவே தக்கவைத்திருக்கும் வீரர்களினை நோக்கும் போது அதில் முதன்மையானவர்களாக ரஷீட் கான் (ட்ரென்ட் ரொக்கெட்ஸ்), அன்ட்ரே ரசல் (சௌத்தர்ன் ப்ரேவ்), ஆரோன் பின்ச் (நொதர்ன் சுபர்சார்ஜர்ஸ்), கேன் வில்லியம்சன் (பர்மிங்கம் பீனிக்ஸ்) ஆகியோர் காணப்படுகின்றனர்.
இந்த வீரர்கள் ஏலத்தில் கொள்வனவு செய்யப்படும் வீரர்களுக்கு அதிகபட்ச ஒப்பந்தத் தொகையாக 140,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்பட்டி 27.5 மில்லியன் ரூபா) வரை கொடுக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம், புதிய ஏலத்தின் போது மொத்தமாக 35 வீரர்கள் (28 உள்நாட்டு வீரர்கள், 7 வெளிநாட்டு வீரர்கள்) அடங்கலாக) அணிகளால் தெரிவு செய்யப்படவிருக்கின்றனர். அதோடு, இந்த வீரர்கள் ஏலம் இணைய வாயிலாக நடைபெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த ”தி ஹன்ரட்” கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுத்த அவுஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், மிச்செல் ஸ்டார்க் மற்றும் நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட், மற்றும் தென்னாபிரிக்காவின் ஏ.பி.டி. வில்லியர்ஸ் ஆகியோர் இம்முறைக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
>>இலங்கை கிரிக்கெட்டுக்கு உயிர்கொடுப்பதே எமது பணி – முரளிதரன்
அதேநேரம், T20 அரங்கில் முன்னணி வீரர்களாக ஜொலிக்கின்ற இம்ரான் தாஹிர், சஹீட் அப்ரிடி மற்றும் பாபர் அசாம் போன்ற வீரர்களும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஏலத்தில் பங்கெடுக்கவிருப்பதோடு, டேல் ஸ்டெய்ன், டேவிட் மில்லர், பாப் டு பிளேசிஸ் ஆகியோரும் கொள்வனவிற்காக காணப்படுகின்றனர்.
அடுத்த வாரத்திற்கான வீரர்கள் ஏலம் நிறைவுக்கு வந்த பின்னர், ”தி ஹன்ரட்” தொடரில் பங்கெடுக்கும் அணிகள் 14 பேர் (3 வெளிநாட்டுவீரர்களுடன்) கொண்டவாறு தமது அணிக்குழாம்களை அமைத்துக் கொள்ள முடியும் என்பதோடு, இங்கிலாந்தின் உள்ளூர் தொடரான T20 ப்ளாஸ்ட் தொடரின் குழுநிலை மோதல்களை அடுத்தும் வீரர் ஒருவரினை Wild Card முறை மூலம் அணிகளுக்கு தெரிவு செய்து கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<