உலகக்கிண்ண தொடருக்கு முன்னரான ஒருநாள் சகலதுறை வீரர்களின் தரவரிசையில் முக்கோண ஒருநாள் தொடரில் பிரகாசித்ததன் மூலம் பங்களாதேஷ் அணி வீரர் சகீப் அல் ஹசன் முதலிடம் பிடித்துள்ளார்.
அயர்லாந்து கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் அண்மையில் பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளினுடைய பங்குபற்றுதலுடன் நிறைவுக்கு வந்திருந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கு பின்னர் மற்றும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னரான சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒருநாள் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசை இன்று (22) வெளியிடப்பட்டுள்ளது.
>>பங்களாதேஷ் அணிக்கு ஒருநாள் தரவரிசை புள்ளியில் கணிசமான அதிகரிப்பு
நிறைவுக்கு வந்திருந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் பிரகாசித்திருந்த பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரரான சகீப் அல் ஹசன் முதலிடத்தில் காணப்பட்ட ஆப்கான் வீரர் ரஷீட் கானை பின்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
32 வயதுடைய இடது கை துடுப்பாட்ட வீரரும், இடது கை சுழல் பந்துவீச்சாளருமான சகீப் அல் ஹசன் அண்மையில் நிறைவுற்ற பங்களாதேஷ் அணி வரலாற்று முக்கோண ஒருநாள் சர்வதேச தொடரை கைப்பற்றியிருந்த தொடரில் மூன்று போட்டிகளில் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது இரண்டு அரைச்சதங்களுடன் மொத்தமாக 140 ஓட்டங்களை குவித்திருந்தார். மேலும் அவர் விளையாடிய மூன்று போட்டிகளினுடைய பந்துவீச்சிலும் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற குழுநிலை போட்டியின் இறுதிப் போட்டியில் சகீப் அல் ஹசன் உபாதைக்குள்ளாகியிருந்தமையினால் அவர் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்ற முக்கோண ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக ஒருநாள் சகலதுறை வீரர்களுக்காக தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீட் கானே 339 தரவரிசை புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்பட்டார். தற்போது ரஷீட் கானை பின்தள்ளி 359 தரவரிசை புள்ளிகளுடன் சகீப் அல் ஹசன் முதலிடம் பிடித்துள்ளார். இருவருக்கும் இடையில் 20 தரவரிசை புள்ளிகள் வித்தியாசம் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் சகலதுறை வீரர்கள் ஒரு அணிக்கு மிகவும் முக்கியமான வீரர்களாக காணப்படுவர். இரண்டு வீரர்களுக்கு சமனாக ஒரு வீரர் காணப்படுவார். இதிலும் சகலதுறை வீரர்களிகள் தரவரிசை ரீதியில் குறிப்பிட்ட வீரர்கள் முன்னனியில் இருப்பது குறித்த அணிக்கு மிகவும் பலமாக அமைந்துள்ளது. அந்த வகையில் உலகக்கிண்ணத்தை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணிக்கும் இது சிறந்த பலமாக அமைந்துள்ளது.
>>உலகக் கிண்ணத்தில் ஓட்ட இயந்திரமாக ஜொலித்த நட்சத்திரங்கள்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் அஞ்செலோ மெத்திவ்ஸ் குறித்த பட்டியலில் 255 புள்ளிகளுடன் முதல் பத்து இடங்களுக்குள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் பலம் வாய்ந்த இந்திய அணி சார்பாக ஒரு வீரர் கூட குறித்த தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா சார்பாக அதிகூடிய நிலையில் கேதார் யாதவ் 242 புள்ளிகளுடன் அண்டில் பெஹ்லுக்வாயோ, மொயின் அலி ஆகிய இரண்டு வீரர்களுடன் சேர்ந்து 12ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.
புதிய ஒருநாள் சகலதுறை வீரர்களின் தரவரிசை (முதல் பத்து இடங்கள்)
- சகீப் அல் ஹசன் (பங்களாதேஷ்) – 359 தரவரிசை புள்ளிகள்
- ரஷீட் கான் (ஆப்கானிஸ்தான்) – 339 தரவரிசை புள்ளிகள்
- மொஹமட் நபி (ஆப்கானிஸ்தான்) – 319 தரவரிசை புள்ளிகள்
- இமாட் வஸீம் (பாகிஸ்தான்) – 289 தரவரிசை புள்ளிகள்
- மிட்செல் சேன்ட்னர் (நியூஸிலாந்து) – 279 தரவரிசை புள்ளிகள்
- கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து) – 271 தரவரிசை புள்ளிகள்
- மொஹமட் ஹபீஸ் (பாகிஸ்தான்) – 266 தரவரிசை புள்ளிகள்
- ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவுகள்) – 264 தரவரிசை புள்ளிகள்
- சிக்கன்டர் ராஸா (ஜிம்பாப்வே) – 261 தரவரிசை புள்ளிகள்
- அஞ்செலோ மெத்திவ்ஸ் (இலங்கை) – 255 தரவரிசை புள்ளிகள்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<