ராங்பூர் ரைடர்ஸ் அணியுடன் இணைந்த சகிப் அல் ஹசன்

351
©Getty

பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரரான சகிப் அல் ஹசன், இம்முறை பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரில் ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 7ஆவது பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் டி-20 தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 2020 ஜனவரி மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது

பிரியாவிடை பெற்றார் நுவன் குலசேகர

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி ……..

இதற்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஒருசில அணிகள் முக்கிய சில வீரர்களை விடுவிப்பு செய்து வருவதுடன், முன்னணி வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றது

இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணிக்காக முக்கிய சில வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க காரணமாக இருந்தவரும், துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் பிரகாசித்த அந்த அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரருமான சகிப் அல் ஹசன், இம்முறை பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் போட்டித் தொடரில் ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  

கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண தொடரில் குல்னா றோயல் பெங்கால் அணியின் தலைவராகச் செயற்பட்ட சகிப், 2ஆவது பருவகாலத்தில் சம்பியன் பட்டம் வென்ற டாக்கா கிளெடியேட்டர்ஸ் அணியை வழிநடத்தியிருந்தார்

இதேநேரம், 2016ஆம் ஆண்டு முதல் டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக வினையாடியிருந்த சகிப் அல் ஹசன், கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் அந்த அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுக்க முக்கிய காரணமாக இருந்தார்.

BPL தொடரில் முதன்முறையாக விளையாடவுள்ள பிரபல வீரர்கள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் இயன் …….

இவ்வாறான ஒரு நிலையில், 2015ஆம் ஆண்டு ராங்பூர் அணிக்காக விளையாடியிருந்த சகிப் அல் ஹசன், மீண்டும் 2ஆவது தடவையாக அந்த அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

இந்த நிலையில், இம்முறை பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் புதிய உரிமையாளருடன் களமிறங்கவுள்ள ராங்பூர் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவின் டொம் மூடி செயற்படவுள்ளார்

இதனிடையே, ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டமை தொடர்பில் சகிப் அல் ஹசன் கருத்து வெளியிடுகையில், .பி.எல் தொடரில் சன்ரைசஸ் அணிக்காக விளையாடிய போது டொம் மூடியின் பயிற்றுவிப்பின் கீழ் விளையாடியுள்ளேன். அவருடைய பயிற்றுவிப்பின் கீழ் விளையாட கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது

எனவே, அனைவரது பங்களிப்புடன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வது எனது பொறுப்பு. இதற்கு முன்னரும் நான் ராங்பூர் அணியின் தலைவராகச் செயற்பட்டுள்ளேன். எனவே, அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களை நன்கு அறிவேன். அது எனக்கு சாதகத்தைக் கொடுக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் போட்டித் தொடர் வரலாற்றில் 1500 ஓட்டங்களைக் குவித்துள்ள சகிப் அல் ஹசன், 100 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய ஒரேயொரு பந்துவீச்சாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.   

இதுஇவ்வாறிருக்க, கடந்த வருடம் ராங்பூர் அணியின் தலைவராகச் செயற்பட்டிருந்த பங்களாதேஷ் ஒருநாள் அணித் தலைவர் ஷ்ரபி மொர்தஷாவை அணியிலிருந்து விடுவிக்க அந்த அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது

இதேவேளை, டாக்கா டைனமைட்ஸ் அணியின் தலைவராகச் செயற்பட்ட சகிப் அல் ஹசனுக்குப் பதிலாக இங்கிலாந்துக்கு உலகக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த இயென் மோர்னை அவ்வணியின் தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த வருடம் சிட்டகொங் வைக்கிங்ஸ் அணிக்காக விளையாடிய பங்களாதேஷ் அணியின் அனுபவமிக்க வீரரும், விக்கெட் காப்பாளருமான முஸ்பிகுர் ரஹீம், இம்முறை போட்டித் தொடரில் கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காகவும், கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக விளையாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால், குல்னா டைட்டன்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<