இலங்கையுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் சகீப்

472

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் சகீப் அல் ஹசன் விலக தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி, இலங்கை அணியுடன் அடுத்த மாத முற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள மூவகை கிரிக்கெட் தொடர்களில் இருந்து சகீப் அல் ஹசன் விலகியுள்ளார்.    

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 4ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது 

இந்த சுற்றுப் பயணத்தில் முதற்கட்டமாக 3 போட்டிகள் கொண்ட T20I தொடரும், அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது. இந்த 2 தொடர்களுக்குமான பங்களாதேஷ் அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.   

இதில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த சகீப் அல் ஹஸனிற்கு ஏற்பட்ட பார்வை கோளாறு காரணமாக குறித்த 2 தொடர்களிலும் பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்குப் பதிலாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I) புதிய தலைவராக நஜ்முல் ஹொசைன் ஷன்டோவை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில், இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரிலும் சகீப் அல் ஹசன் விளையாட மாட்டார் என்று அந்நாட்டின் கிரிக்கெட் நடவடிக்கைகளின் தலைவர் ஜலால் யூனுஸ் Cricbuzz இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ‘சகீப்பின் கண்கள் இப்போது நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் அவருக்கு ஓய்வு தேவை என்று நினைக்கிறேன். இதனால் அவருக்கு இலங்கை அணியுடனான தொடரில் ஓய்வளிக்க தீர்மானித்துள்ளோம். எனவே, ஓய்விற்குப் பிறகு முழு உடற்தகுதியுடன் மீண்டும் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் நுழைய முடியும் என்று அவர் கூறினார். 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மார்ச் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரானது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாகும். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<