இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில், பங்களாதேஷ் அணியின் முன்னணி சகலதுறை வீரர் சகீப் அல் ஹஸன் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சகீப் அல் ஹஸனுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அவரால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
>>மும்பை அணியிலிருந்து வெளியேறும் சூர்யகுமார் யாதவ்
சகீப் அல் ஹஸன் அமெரிக்காவிலிருந்து நேற்றைய தினம் (09) நாடு திரும்பியிருந்ததாகவும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, சகீப் அல் ஹஸன் கொவிட்-19 விதிமுறையின்படி, தனிமைப்படுத்தலில் இருந்து சிகிச்சைகளை பெற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சகீப் அல் ஹஸனால், இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தகவல்கள் தெரிவித்துள்ளன. சகீப் அல் ஹஸனின் இந்த வெளியேற்றம் பங்களாதேஷ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை குழாம், கடந்த 8ம் திகதி அங்கு சென்றடைந்திருந்தது. இதில், இன்றைய தினம் பயிற்சிப்போட்டியில் இலங்கை அணி விளையாடியிருந்த போதும், மழைக்குறுக்கிட்ட காரணத்தால் போட்டியானது 8.3 ஓவர்களில் நிறுத்தப்பட்டிருந்தது. இதன்போது, இலங்கை அணியானது 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்திருந்தது. இந்த பயிற்சிப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை (11) நடைபெறும்.
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<