மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான குழாத்தில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன் இணைக்கப்பட்டுள்ளார்.
சூதாட்ட தரகர்கள் நெருங்கிய விடயத்தினை வெளிப்படுத்த தவறியதன் காரணமாக, ஐசிசியின் தடைக்கு முகங்கொடுத்திருந்த சகீப் அல் ஹசன், மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பும் முதல் தொடராக, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் அமையவுள்ளது.
இங்கிலாந்து அணியுடன் இணையும் மொயின் அலி
எவ்வாறாயினும், சகீப் அல் ஹசன் கடந்த வருட இறுதியில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நடத்தியிருந்த உள்ளூர் போட்டித் தொடரில் விளையாடி, முதற்தர கிரிக்கெட்டுக்கான மீள் வருகையை பதிவுசெய்திருந்தார்.
அதுமாத்திரமின்றி, இவர் விளையாடிய பயிற்சிப்போட்டியில் அரைச்சதத்தையும் கடந்திருந்தார். சகீப் அல் ஹசன் அணிக்கு திரும்பும் அதேநேரம், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு பின்னர் பங்களாதேஷ் அணி விளையாடும் முதல் சர்வதேச தொடராகவும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் அமையவுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் குழாத்திலிருந்து, பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவரான மஷ்ரபீ மொர்டஷா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தமிம் இக்பால் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மஷ்ரபீ மொர்டஷா உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுவந்த போதும், முதன்முறையாக உபாதையின்றி, குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மஷ்ரபீ மொர்டஷா பங்களாதேஷ் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய முக்கிய சில வீரர்களும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அல் அமின் ஹுசைன், சயிபுல் ஹசன் மற்றும் மொஹமட் மிதுன் ஆகியோரும் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், குழாத்தில் சொரிபுல் இஸ்லாம், ஹசான் மஹ்மூட் மற்றும் மெஹிடி ஹாசன் ஆகியோர் முதன்முறையாக டெஸ்ட் குழாத்துக்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, இந்த தொடருக்காக 24 வீரர்கள் கொண்ட முதற்கட்ட குழாம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் இறுதி ஒருநாள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் குழாம்
தமிம் இக்பால் (தலைவர்), சகீப் அல் ஹசன், நஜ்முல் ஹுசைன் சன்டொ, முஷ்பிகூர் ரஹீம், மொஹமட் மிதுன், லிடன் டாஸ், மொஹமதுல்லாஹ், அபிப் ஹுசைன், தைஜுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான், மெஹிதி ஹசன், மொஹமட் சய்புதீன், மஹிடி ஹசன், ஹசன் மஹ்மூட், சொரிபுல் இஸ்லாம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<