பங்காளதேஷ் டெஸ்ட் அணியின் தலைவராக அனுபவ சகலதுறை வீரர் சகீப் அல் ஹஸன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பின்னர் மொமினுல் ஹக் பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
>> இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் லசித் மாலிங்க
கடந்த காலங்களாக துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பை மொமினுல் ஹக் வெளிப்படுத்த தவறிய பட்சத்தில், அவருடைய தலைவர் பதவி குறித்து ஆராயுமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. எனவே, தன்னுடைய துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தும் முகமாக அவர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதன்காரணமாக சகீப் அல் ஹஸன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சகீப் அல் ஹஸன் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் புகாரளிக்காத காரணத்தால் கடந்த 2019ம் ஆண்டு அவருக்கு ஐசிசி தடைவிதித்திருந்தது. அதனால், தன்னுடைய தலைவர் பதவியையும் சகீப் அல் ஹஸன் இழந்திருந்தார்.
இதன்பின்னர் 2019ம் ஆண்டு தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட மொமினுல் ஹக்கின் கீழ் பங்களாதேஷ் அணி நியூசிலாந்தில் வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவுசெய்ததுடன், மொத்தமாக 17 போட்டிகளில் 3 வெற்றிகளையும், 12 தோல்விகளையும் சந்தித்துள்ளது.
சகீப் அல் ஹஸன் முதன்முறையாக 2009ம் ஆண்டு அணியின் தலைவர் பொறுப்பை ஏற்றிருந்ததுடன், அதனைத்தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு முஷ்பிகூர் ரஹீம் பதவி விலகியதை தொடர்ந்து தலைவராக நியமிக்கப்பட்டார்.
சகீப் அல் ஹஸன் பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவராக 14 போட்டிகளில் செயற்பட்டுள்ளதுடன் அதில் 3 வெற்றிகளையும், 11 தோல்விகளையும் சந்தித்துள்ளார். புதிய தலைவராக சகீப் அல் ஹஸன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவராக லிடன் டாஸ் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<