இலங்கை தொடரில் விளையாடுவாரா சகிப் அல் ஹசன்?

280

ஐசிசியின் தடைக்கு முகங்கொடுத்து வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன், இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூதாட்ட தரகர் ஒருவர் சகிப் அல் ஹசனுடன் தொடர்புக்கொண்ட விடயத்தினை, கிரிக்கெட் சபை மற்றும் ஐசிசி ஆகியவற்றுக்கு அறிவிக்க தவறியதன் காரணமாக, ஒருவருட இடைக்கால தடைக்கு சகிப் அல் ஹசன் முகங்கொடுத்துள்ளார்.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமனம்

கொவிட்-19 காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த 4-5 மாதங்களுக்கு தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்தநிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 29ம் திகதியுடன் சகிப் அல் ஹசனின் தடைக்காலம் நிறைவுக்கு வருகின்றது.

இந்தநிலையில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தொடர் விரைவில் உறுதிசெய்யப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, சகிப் அல் ஹசன் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாவிட்டாலும், தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

சகிப் அல் ஹசன் அடுத்த மாதமளவில் BKSP அக்கடமியில் தன்னுடைய பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், அவருடைய உடற்தகுதி தொடர்பில் அதிக கவனங்கள் செலுத்தப்பட்டு வருவதாக அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது சகிப் அல் ஹசன் 2019

அதேநேரம், பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் ரசல் டொமிங்கோ, சகிப் அல் ஹசனின் மீள்வருகை தொடர்பில் குறிப்பிடுகையில், அவரின் உடற்தகுதி மற்றும் பயிற்சிப் போட்டிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், கொவிட்-19 காரணமாக கடந்த சில மாதங்களாக போட்டிகள் நடைபெறாத காரணத்தால், ஏனைய வீரர்களுக்கும், சகிப் அல் ஹசனுக்கும் இடையில் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சகிப் மற்றும் ஏனைய வீரர்களிடையில் அதிக வித்தியாசங்கள் இல்லை. நாம் 5-6 மாதங்கள் விளையாடவில்லை. வீரர்களது உடற்தகுதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. சர்வதேச மட்டத்துக்கான உடற்தகுதியை அவர்கள் கொண்டிருக்க வேண்டும். சகிப் அல் ஹசன் விளையாடுவதற்கு முன்னர் சில போட்டி பயிற்சிகளை வழங்க வேண்டும். ஏனைய வீரர்களுக்கும் இதே போன்றுதான். போட்டிகள் விளையாடும் பயிற்சி இல்லாமல், சர்வதேச போட்டிகளுக்கு செல்ல முடியாது” என ரசல் டொமிங்கெகோ சுட்டிக்காட்டினார்.

சகிப் அல் ஹசன் தொடர்பில் மேலும் குறிப்பிட்ட இவர், “சகிப் அல் ஹசனுக்கு விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர் உலகத் தரம் வாய்ந்த வீரர். எனவே, அவர் விரைவில் சர்வதேச போட்டிக்கு திரும்புவார். எனினும், உடற்தகுதி மாத்திரமே முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Video – LPL இல் களமிறங்கும் நட்சத்திரங்கள்|Sports RoundUp – Epi 127

சகிப் அல் ஹசனின் தடை ஒக்டோபர் 29ம் திகதி நிறைவடைகிறது. தடைக்கு உள்ளான கிரிக்கெட் வீரர் என்ற ரீதியில் உத்தியோகபூர்வமற்ற போட்டிகளில் விளையாடி, அவரது உடற்தகுதியையும், பிரகாசிப்பையும் மீண்டும் அவர் பெற்றுக்கொள்ளலாம். அவருக்கான பயிற்சிப் போட்டிகள், அணிக்குள்ளான பயிற்சிப் போட்டிகளாக இருக்கலாம். ஆனால், அவர் விளையாட வேண்டும் என்பதை தேர்வுக்குழுவினர் மாத்திரமே தீர்மானிக்க முடியும்” என டொமிங்கோ மேலும் குறிப்பிட்டார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கை தொடருக்காக எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிப் பகுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க