பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறைவீரரான சகீப் அல்ஹசன் இரசிகர் ஒருவரை மைதானத்திற்குள் உள்ளே வைத்து தாக்க முயன்ற காணொளி வைரலாகியதனைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார்.
>>மகளிர் T20 உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு
சகீப் அல் ஹசன் தற்போது பங்களாதேஷின் உள்ளூர் லீக் தொடரான டாக்கா பிரீமியர் லீக் (DPL) தொடரில் ஆடி வருகின்றார். இவர் குறிப்பிட்ட தொடரின் போட்டியொன்றில் ஆட முன்னர் பயிற்சியாளர்களிடம் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தார்.
எனினும் குறிப்பிட்ட கலந்துரையாடலின் நடுவே மைதானத்திற்குள் நுழைந்த இரசிகர் ஒருவர் சகீப் அல் ஹசனுடன் புகைப்படம் (Selfie) ஒன்றை எடுக்க முயன்ற சந்தர்ப்பத்தில், சகீப் அல் ஹசன் அந்த இரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்க முயன்றிருப்பது காணொளி ஒன்றில் பதிவாகியிருக்கின்றது.
குறிப்பிட்ட சம்பவத்தின் காணொளி வைரல் ஆனதை தொடர்ந்தே தற்போது சகீப் அல் ஹசன் சர்ச்சைக்குள் சிக்கியிருப்பதோடு விமர்சனங்களையும் முகம் கொடுத்திருக்கின்றார்.
எனினும் பங்களாதேஷ் செய்தி இணையதளம் ஒன்று சகீப் அல் ஹசன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் இருந்த போது குறிப்பிட்ட இரசிகர் அதனை இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டதன் காரணமாகவே அவரை தாக்கும் வகையில் செயற்பட்டதாக தெரிவித்துள்ளது.
>>Shakib Al Hasan | Fan Incident | DPL | Sports News
அதேவேளை சகீப் அல் ஹசன் கிரிக்கெட் போட்டிகளின் போது முன் கோபத்தில் செய்யும் செயற்பாடுகளுக்காக சர்ச்சைகளில் சிக்கி ஏற்கனவே விமர்சனங்களை முகம் கொடுத்திருக்கின்றார். அவர் இதற்கு முன்னதாக மைதான நடுவருடன் முரண்பட்டு விக்கெட்டுக்களை தகர்த்த காணொளி ஒன்றுக்காகவும் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<