தனது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வாய்ப்பை அழித்தவர் சஹீட் அப்ரிடி என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் புதிய ஒருநாள் அணித் தலைவராக பாபர் அசாம்
2000 முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய 39 வயதான டேனிஷ் கனேரியா 61 டெஸ்ட் மற்றும் 18 ஒருநாள் போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடினார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா பிடிஐ செய்திச் சேவைக்கு அளித்த ஒரு பேட்டியில்,
“நானும், அப்ரிடியும் ஒரே துறை அணிக்காக உள்ளூர் போட்டியில் விளையாடிய போதும், ஒருநாள் போட்டியில் விளையாடிய போது அவர் எப்பொழுதும் எனக்கு எதிராகவே நடந்து கொண்டார்.
எனக்கு பாகிஸ்தானுக்காக அதிக ஒருநாள் போட்டியில் விளையாட முடியவில்லை. அதற்கு காரணம் அப்ரிடி தான். உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் அவர் தலைவராக இருக்கையில் என்னிடம் நியாயமாக நடந்து கொண்டதில்லை.
எந்தவித காரணமும் இல்லாமல் என்னை அணியில் விளையாடவிடாமல் வெளியில் உட்கார வைப்பார். மற்றவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அவர் எனக்கு ஒருபோதும் ஆதரவு அளித்தது கிடையாது. அவர் என்னை இப்படி நடத்தியதற்கு காரணம் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
அதையும் மீறி நான் பாகிஸ்தான் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த வருடம் தனது மதம் காரணமாக பாகிஸ்தான் அணியில் நியாயமற்ற முறையில் டேனிஷ் கனேரியா நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சொயிப் அக்தர் தெரிவித்திருந்தார். இந்த கருத்தை ஆதரித்த அவர், அப்ரிடி மாத்திரம் இல்லாவிட்டால் பாகிஸ்தானுக்காக 18 இற்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியிருப்பேன் என தெரிவித்தார்.
இங்கிலாந்து தொடருக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கும் பாகிஸ்தான்
“மறுபுறத்தில் நாங்கள் இருவரும் லெக்ஸ் பின் சுழல் பந்துவீச்சாளராக இருந்தோம். அது மற்றொரு காரணம். அப்போது பாகிஸ்தானுக்காக விளையாடிய பெரிய நட்சத்திரமாக அவர் திகழ்ந்தார். அதற்காக என்னை ஏன் அப்படி நடத்த வேண்டும் என்று எனக்கு புரியவில்லை.
இறுதி பதினொருவரில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் விளையாட முடியாது என்று அவர்கள் கூறினர். அதேபோல மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டில் எனது களத்தடுப்பில் பிரச்சினை உள்ளது என அவர்கள் சொல்வார்கள்.
அந்த நேரத்தில் மிகவும் பொருத்தமான தலைவர்கள் யார் என்று நீங்கள் சொல்லுங்கள்? பாகிஸ்தான் அணியில் அப்போது ஒன்று அல்லது இரண்டு நல்ல களத்தடுப்பாளர்கள் மட்டுமே இருந்தனர். எனினும், பாகிஸ்தான் எப்படியும் களத்தடுப்பாளர்களை இனங்காணவில்லை.
இதனிடையே, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாதபோது, சஹீட் அப்ரிடி திரும்பி வந்து என்னை திணைக்கள கிரிக்கெட் அணியில் இருந்து விலக்குவார்” என அவர் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டில் கவுண்டி போட்டியில் டர்ஹமிற்கு எதிராக எசெக்ஸ் அணிக்காக கனேரியா விளையாடிய போது மெர்வின் வெஸ்ட்ஃபீல்டுடன் சூதாட்டத்தில் சிக்கி குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.
இந்த நிலையில், தன்மீது விதிக்கப்பட்டுள்ள வாழ்நாள் தடை நீக்கும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “நான் மத அட்டையை காண்பித்து விளையாட விரும்பவில்லை. நான் விரும்புவது பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஆதரவு மட்டுமே.
மொஹமட் ஆமிர், சல்மான் பட் ஆகியோரின் தடையை நீக்கி மீண்டும் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்க முடிந்தால் ஏன் எனக்கு இல்லை?
ஆம், நான் தவறு செய்தேன், ஆனால் மற்றவர்களும் அவ்வாறே செய்தார்கள். அவர்கள் என்னை ஒரு கழிப்பறை காகிதத்தைப் போல பயன்படுத்த முடியாது. நான் நீண்ட காலமாக பாகிஸ்தானுக்கு சேவை செய்தேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவர்கள் என்னை ஆதரிக்க வேண்டும்.
இலங்கையிலிருந்து சரக்கு விமானத்தில் சென்ற பாக். வீரர்கள்
இந்த நிலையில், இன்சமாம்–உல்–ஹக் தலைமையில் கனேரியா அதிக போட்டிகளில் விளையாடியிருந்தார். எனினும், இன்சமாமும், யூனிஸ் கானும் தனக்கு மிகவும் ஆதரவளித்ததாக அவர் கூறினார்.
“நான் மொயின் கான், ராஷித் லத்தீப், இன்சமாம் உல் ஹக், யூனிஸ் கான் ஆகியோரின் கீழ் விளையாடியுள்ளேன். அதேபோல நான் அப்ரிடியின் கீழ் மிகக் குறைவான போட்டிகளில் விளையாடினேன். ஆனால் இன்சமாமும், யூனிஸ் கானும் எனக்கு நிறைய ஆதரவளித்தனர். அதுதான் உண்மை.
இருப்பினும், இன்சமாம் உல் ஹக் என்னைப் பற்றி பொதுவாக சாதகமாகப் பேசமாட்டார். ஆனால் அவரது ஆதரவுக்கு நான் எப்போதும் அவருக்கு நன்றி செலுத்துவேன். நான் அவருக்கு கீழ் பட்டை தீட்டப்பட்டேன்” என கனேரியா மேலும் கூறினார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<