ஆசியக்கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாத்திலிருந்து முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சஹீன் ஷா அப்ரிடியின் வலது முழங்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர் 4 தொடக்கம் 6 வாரங்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வைத்திய குழாம் தெரிவித்துள்ளது.
>> அபு தாபியில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட ஆசியக்கிண்ணம்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சஹீன் அப்ரிடி உபாதைக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், நெதர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடவில்லை.
தற்போது இவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஸ்கேன் பரிசோதனையின்போதே, சஹீன் அப்ரிடியின் உபாதை தொடர்பில் முழுமையான தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, ஆசியக்கிண்ணத்தொடரை இவர் தவறவிடுவதுடன், T20I உலகக்கிண்ணத்துக்கான தயார்படுத்தல்களில் ஈடுபடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20I உலகக்கிண்ணத்துக்கு முன்னர் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடரில் விளையாடுவதற்கு சஹீன் ஷா அப்ரிடி தகுதிபெறுவார் என அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஆசியக்கிண்ணத்தொடர் இம்மாதம் 27ம் திகதி முதல் செப்டம்பர் 11ம் திகதிவரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், அபு தாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<