நியூசிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து சதாப் கான் நீக்கம்!

Shadab Khan out of first New Zealand Test with a thigh injury - Tamil

255
(Photo by DAN MULLAN/POOL/AFP via Getty Images)

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் குழாத்திலிருந்து அவ்வணியின் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் சதாப் கான் நீக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான T20I தொடருக்கான பாகிஸ்தான் அணியை சதாப் கான் வழிநடத்தியிருந்ததுடன், தொடரில் பாகிஸ்தான் அணி 1-2 என தோல்வியை சந்தித்திருந்தது. இந்தநிலையில், சதாப் கானின் இடது தொடைப்பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

>>இலங்கை அணியின் தயார்படுத்தல்கள் குறித்து மிக்கி ஆத்தர்

சதாப் கான் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக மற்றுமொரு இடதுகை சுழல் பந்துவீச்சாளரான ஷபர் கொஹார் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

சதாப் கான் ஏற்கனவே கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து, இடுப்பு பகுதியில் உபாதை ஏற்பட்டதன் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

எனினும், குறித்த உபாதையிலிருந்து குணமடைந்த இவர், நியூசிலாந்து தொடருக்கு தயாராகியிருந்தார். இதற்கிடையில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம், உபாதை காரணமாக தொடரிலிருந்து விலகியதால், T20I அணியின் தலைவராகவும் சதாப் கான் செயற்பட்டிருந்தார்.

சதாப் கான் தன்னுடைய உபாதை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் அறிவித்திருந்த நிலையில், அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, எதிர்வரும் 7 நாட்களுக்கு அவரால் அணியில் இணையமுடியாது என குறிப்பிடப்பட்டது. எவ்வாறாயினும், எதிர்வரும் வியாழக்கிழமை அவருக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதுடன், உபாதை குறித்த மேலதிக தகவல்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷபர் கொஹார் ஏற்கனவே பாகிஸ்தான் டெஸ்ட் குழாத்துடன் இணைந்துள்ளார் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இவர், கடந்த பருவகாலத்தில் நடைபெற்ற குவைட் ஈ அஷாம் கிண்ணத் தொடரில் ஐந்து, நான்கு விக்கெட் பிரதிகள் அடங்கலாக 38 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

ஷபர் கொஹார் கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியிருந்தாலும், அதன்பின்னர் பாகிஸ்தான் அணிக்காக இணைத்துக்கொள்ளப்படவில்லை.  ஷபர் கொஹார், இதுவரையில், 39 முதற்தர போட்டிகளில் விளையாடி 144 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 26ம் திகதி மௌண்ட் மங்கனுயில் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<