அதிவேகமாக பந்து வீசி மும்பை வீராங்கனை சாதனை

Women's Premier League 2024

170
Shabnim Ismail

மகளிர் WPL. கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வருகின்ற தென்னாபிரிக்கா வீராங்கனை சப்னிம் இஸ்மாயில் மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்துவீசி சாதனை படைத்துள்ளார். 

மகளிருக்கான WPL கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் (05) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கெபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான லீக் போட்டி நடைபெற்றது. இதில் போட்டியின் மூன்றாவது ஓவரை வீசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீராங்கனை சப்னிம் இஸ்மாயில் 132.1 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசினார். 

இதன்மூலம் மகளிர் கிரிக்கெட்டில் வேகமாக பந்து வீசிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக எந்த வீராங்கனையும் 130 கிலோ மீற்றர் வேகத்தை தாண்டியதில்லை. இதற்கு முன்னதாக 2016இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக 128 கிலோ மீற்றர் வேகத்தில் சப்னிம் இஸ்மாயில் வீசியதே சாதனையாக இருந்தது. தற்போது தனது சொந்த சாதனையை 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவரே முறியடித்துள்ளார். 

மேலும், 2022 மகளிர் உலகக் கிண்ண தொடரில் இரண்டு தடவைகள் 127 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசியுள்ளார். தென்னாபிரிக்கா அணிக்காக கடந்த 16 ஆண்டுகளாக விளையாடி வருகின்ற 34 வயதான இஸ்மாயில், இதுவரை 127 ஒருநாள் மற்றும் 113 T20i போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோல, ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் களம் இறங்கியுள்ளார். 

கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற சப்னிம் இஸ்மாயில் தொடர்ந்து முதல் தர மற்றும் T20i லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். 

இதேவேளை, நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் 192 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 163 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியைத் தழுவியது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<