பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்து தொடரின் நான்காவது லீக் போட்டியில் சீசெல்ஸ் வீரர்கள் இலங்கை அணியை 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டு, தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.
ஏற்கனவே தமது முதல் போட்டியை இரண்டு அணிகளும் சமப்படுத்திய நிலையில், கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் சனிக்கிழமை (13) இடம்பெற்ற இந்த போட்டியில் களமிறங்கின.
இலங்கை முதல் பதினொருவர்
ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இலங்கை அணி வீரர்கள் மிக வேகமான பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர்.
போட்டியின் 15வது நிமிடத்தில் இலங்கை அணியின் பெனால்டி எல்லையில் வைத்து அசிகுர் ரஹ்மானின் கைகளில் பந்து பட்டமையினால் சீசெல்ஸ் அணிக்கு பெனால்டிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைப் பெற்ற அணியின் தலைவர் பென்வோ மெரி இடது பக்க கம்பத்தினை தாண்டி வெளியில் பந்தை உதைந்து கோலுக்கான வாய்ப்பை தவறவிட்டார்.
மீண்டும் 25வது நிமிடத்தில் சீசெல்ஸ் அணிக்கு இலங்கை எல்லையின் மத்திய களத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை ஸ்டீபன் மெரி பெற்றார். அவர் உதைந்த பந்து இலங்கை அணியின் கோலின் மேல் கம்பத்தில் பட்டு வெளியே சென்றது.
- வசீமின் ஹெட்ரிக்குடன் மாலைதீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை
- பிரதமர் கிண்ண முதல் நாள் போட்டிகள் ஒத்திவைப்பு
- இலங்கை கால்பந்து குழாத்தில் இளம், சிரேஷ்ட வீரர்கள் இணைப்பு
- இலங்கையில் இடம்பெறும் நான்கு நாடுகள் பங்கேற்கும் கால்பந்து தொடர்
- Photos – Four Nations | Pre-match press conference
போட்டியின் 33ஆவது நிமிடத்தில் சீசெல்ஸ் வீரர் பெர்ரி மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்தை சுஜான் பாயந்து கம்பங்களுக்கு மேலால் வெளியே தட்டி விட்டார்.
ஆட்டத்தின் 35 நிமிடங்கள் கடந்த நிலையில் முன்னோக்கி பந்தை எடுத்துச் சென்ற ஷலன சமீர கோல் எல்லைக்கு வெளியில் இருந்து வேகமாக உதைந்த பந்து வெளியே சென்றது.
எனவே, முதல் பாதி கோல்கள் எதுவும் இன்றி நிறைவடைந்தது.
முதல் பாதி: சீசெல்ஸ் 0 – 0 இலங்கை
இரண்டாம் பாதி ஆரம்பமாகி 20 நிமிடங்கள் கடந்த நிலையில் சீசெல்ஸ் வீரர்களுக்கு கிடைத்த கோணர் வாய்ப்பை மாற்று வீரராக வந்த ஜோசிப் ஹென்ரி பெற்றார். அவர் உள்ளனுப்பிய பந்தை வர்ரென் எரிக் ஹெடர் செய்து போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.
அடுத்த சில நிமிடங்களில் மத்திய களத்தில் இருந்து சீசெல்ஸ் வீரர் உயர்த்தி உள்ளனுப்பிய பந்தை தடுக்க சுஜான் முன்னே வருவதற்கு முன்னர், ஜோசிப் பந்தை ஹெடர் செய்தார். எனினும், அது கம்பங்களை விட சற்று உயர்ந்து வெளியே சென்றது.
ஆட்டம் 80வது நிமிடத்தை அண்மித்த நிலையில் இலங்கை அணியில் 4 வீரர்கள் அடுத்தடுத்து மாற்றம் செய்யப்பட்டனர்.
அதன் பின்னர், பார்வையாளர்களின் கோஷத்திற்கு மத்தியில் தமது ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்த இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டர். எனினும், போட்டியின் இறுதி நிமிடம்வரை இலங்கை வீரர்களுக்கு கோலுக்கான வாய்ப்பை சீசெல்ஸ் வழங்கவில்லை.
எனவே, ஆட்ட நிறைவில் எரிக் பெற்ற கோலினால் 1-0 என சீசெல்ஸ் வெற்றி பெற்றது. s
முழு நேரம்: சீசெல்ஸ் 1 – 0 இலங்கை
கோல் பெற்றவர்கள்
சீசெல்ஸ் – வர்ரென் எரிக் 68’
மஞ்சள் அட்டை பெற்றவர்கள்
சீசெல்ஸ் – மார்க் நெனெரொ 61’, ரெம்பேட் 61’
பங்களாதேஷ் எதிர் மாலைதீவுகள்
சனிக்கிழமை இதே மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் மாலைதீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.
போட்டியின் 12ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் வீரர் ஜமால் புயான் முதல் கோலைப் பெற, 32ஆவது நிமிடத்தில் மொஹமட் உமைர் மாலைதீவுகள் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.
பின்னர் இரண்டாம் பாதியில் இரண்டு அணிகளும் வெற்றி கோலுக்கான முயற்சியில் ஈடுபட்டாலும் சிறந்த தடுப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் 85ஆவது நிமிடம்வரை கோல்கள் பெறப்படவில்லை.
எனினும், போட்டியின் இறுதி நிமிடங்களில் மாலைதீவுகள் கோல் காப்பாளர் நாஜிஹ் எதிரணி வீரரை முறையற்ற விதத்தில் வீழ்த்த, பங்களாதேஷ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை தோபோ பர்மன் கோலாக்கினார்.
எனவே, ஆட்ட நிறைவில் 2-1 என வெற்றி பெற்ற பங்களாதேஷ் வீரர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத் தொடரின் முதல் வெற்றியப் பதிவு செய்தனர்.
பங்களாதேஷ் அணி தமது இறுதி மோதில் இலங்கை அணியையும், மாலைதீவுகள் அணி, சீசெல்ஸ் அணியையும் எதிர்கொள்ளவுள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறும்.
>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<