இலங்கை கால்பந்து ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இலங்கை மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடான சீசெல்ஸ் அணிகளுக்கு இடையில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெறவுள்ளது.
தெற்காசிய நாடுகளான மாலைதீவுகள், பங்களாதேஷ் மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடான சீசெல்ஸ் அணிகளுடன் சேர்த்து போட்டிகளை நடாத்தும் இலங்கை அணி என நான்கு நாடுகள் மோதிய இந்த சர்வதேச அழைப்பு கால்பந்து தொடர் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகியது.
இந்த கால்பந்து தொடரில் லீக் முறையில் இடம்பெற்ற முதல் சுற்றில் அனைத்து அணிகளும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. அதன் நிறைவில் 3 போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் இரண்டு சமநிலையான முடிவுகளைப் பெற்ற சீசெல்ஸ் அணி தோல்விகள் எதுவுமின்றி 5 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது. இதேவேளை, இலங்கை தலா ஒரு வெற்றி, தோல்வி மற்றும் ஒரு சமநிலை என வெவ்வேறு முடிவுகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு தனது இடத்தை உறுதி செய்து கொண்டது.
>> பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை
இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண தொடரின் சம்பியனைத் தெரிவு செய்வதற்காக இவ்விரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை (19) இரவு 7 மணிக்கு கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
சொந்த நாட்டு ரசிகர்களின் முன்னிலையில் நீண்ட ஒரு இடைவெளியின் பின்னர் சர்வதேச கால்பந்து போட்டியொன்றில் ஆடும் இலங்கை அணிக்கு கிண்ணத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. எனினும், லீக் போட்டியில் சீசெல்ஸ் அணியிடம் பெற்ற தோல்வி, இலங்கை அணிக்கு இறுதிப் போட்டி இலகுவாக அமையாது என்பதைக் எடுத்துக் காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் இறுதியாக இலங்கை மோதிய போட்டியில் பலம் மிக்க பங்களாதேஷ் வீரர்களை 10 வீரர்களுடன் ஆடி வீழ்த்தியமை இலங்கை வீரர்களுக்கு இறுதிப் போட்டிக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக, தொடரில் வெறும் 3 போட்டிகளில் 6 கோல்களைப் பெற்று நாயகனாக திகழும் வசீம் ராசிக் அணிக்கு பெரிய ஒரு பலமாக உள்ளார்.
எனினும், சிரேஷ்ட மற்றும் அனுபவ வீரர் டக்சன் பியுஸ்லஸ் பங்களாதேஷ் உடனான போட்டியில் சிவப்பு அட்டை பெற்றமையினால் அடுத்த போட்டியை தவறவிடுகின்றார். இது இலங்கைக்கு மிகப் பெரிய இழப்பாகப் பார்க்கப்படுகின்றது.
எனினும், ஷரித்த ரத்னாயக்க, அசிகுர் ரஹ்மான், ஜூட் சுபன், ஹர்ஷ பெர்னாண்டோ அல்லது ஷமோத் டில்ஷான் போன்ற அனுபவ வீரர்கள் அணியின் பின்களத்தை பலப்படுத்த இருக்கின்றனர்.
Photo Album – Sri Lanka vs Bangladesh | Four Nations – Prime Minister Mahinda Rajapaksa Trophy
அது போன்றே, பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் உபாதைக்குள்ளாகிய முன்கள வீரர்களான டிலன் டி சில்வா மற்றும் கவிந்து இஷான் ஆகியோர் இறுதிப் போட்டியில் ஆடுவது சந்தேகத்திற்கிடமாகவே காணப்படுகின்றது.
எனவே, முக்கிய 3 வீரர்களை பிரதியீடு செய்து இறுதிப் போட்டியில் விளையாட வேண்டிய நிலைக்கு இலங்கை அணி உள்ளாகியுள்ளது. எனினும், தொடரில் ஏனைய வீரர்களும் சிறந்த திறமையை வெளிப்படுத்தியுள்ளமையினால் இறுதிப் போட்டிக்கு சிறந்த திட்டமிடல் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு இலங்கைக்கு நிச்சயம் கிடைக்கும்.
அணியின் தலைவர் சுஜான் பெரேரா எப்பொழுதும் போல கோல் காப்பில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றார். அது போன்றே, இந்த தொடரில் மத்திய களத்தில் ஆடும் ஷலன சமீர, சஸ்னி ஆகியோரும் சிறந்த திறமையை வெளிப்படுத்திய நிலையில் உள்ளனர்.
எனினும், சீசெல்ஸ் அணி தமது உயரமான வீரர்களைக் கொண்டு, உயர்ந்த பந்துகளை செலுத்தி கோலுக்கான முயற்சிகளைப் பெறும் திட்டத்திற்கு எதிராக இலங்கை தமது தடுப்பாட்டத் திட்டங்களை மேற்கொள்வது மிக முக்கியமாகும்.
சீசெல்ஸ் அணியைப் பார்க்கும்போது, இரண்டு வருடங்களாக கால்பந்து போட்டிகளில் எதிலும் ஆடாத அவ்வணி வீரர்கள் குறுகிய கால பயிற்சி ஒன்றுடனேயே இந்த தொடருக்காக வந்துள்ளனர்.
எனினும், இந்த தொடரில் அவர்கள் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் போட்டிக்குப் போட்டியாக வீரர்களிடம் முன்னேற்றகரமான விளையாட்டைக் காண முடியுமாக இருந்தது.
சீசெல்ஸ் அணிக்காக, தொடரின் 3 போட்டிகளையும் முதல் பதினொருவரில் ஆரம்பித்த மார்க் ஜெனாரோ, இறுதியாக மாலைதீவுகளுடனான போட்டியில் சிவப்பு அட்டையினைப் பெற்றிருந்தார். எனவே, அவரும் இறுதிப் போட்டியில் விளையாட முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளார்.
குறிப்பாக, அங்த அணியின் தலைவர் ஸ்டீவ் மரி மற்றும் வெர்ரன் எரிக் ஆகிய வீரர்கள் இலங்கை அணியால் கண்காணிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர். அதேபோன்று, மிக வேகமான வீரராக உள்ள பெர்ரி எனெஸ்டாவைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கையின் மத்தியகள வீரர்களுக்கு உண்டு.
எனினும், அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் நெவில் விவியனின் திட்டங்கள் போட்டிக்குப் போட்டி மாற்றமடையும் என்பதால், இலங்கை அணியுடனான போட்டிக்கு சீசெல்ஸ் சிறந்த ஒரு திட்டத்துடனேயே களமிறங்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
எது எப்படி இருந்தாலும், அண்மைக் காலங்களில் வெற்றிகளை சுவைக்கும் வாய்ப்பை இழந்திருந்த இலங்கை அணிக்கு இது இரண்டு தசாப்தங்களின் பின்னர் ஒரு சர்வதேச தொடரில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய மகத்தான சந்தர்ப்பமாக உள்ளது.
அதேவேளை, இலங்கை அணிக்கு இறுதிப் போட்டியில் சொந்த மைதான ரசிகர்களின் கோஷமும் ஆதரவும் முழுமையாக இருக்கும். இந்த ஆதரவுக்கு மத்தியில் கிண்ணத்திற்கான ஒரு வெற்றி வேட்கையுடன் இந்த இறுதிப் போட்டியில் இலங்கை களமிறங்கவுள்ளது.
எனவே, குதிரைப் பந்தயத் திடல் வெள்ளிக்கிழமை இரவு ஒரு விறுவிறுப்பான கால்பந்து மோதலினால் அலங்கரிக்கப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<