மேலும் 7 பாக். வீரர்களுக்கு கொரோனா தொற்று

296

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலும் ஏழு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி வசீம் கான் செவ்வாய்க்கிழமை (23) உறுதி செய்தார். தேசிய அணியின் மூன்று வீரர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு ஒரு தினத்துக்குள்ளேயே அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிதுள்ளது.  

பகார் சமான், இம்ரான் கான், காசிப் பாட்டி, மொஹமட் ஹபீஸ், மொஹமட் ஹஸ்னைனி, மொஹமட் ரிஸ்வான் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோருக்கே புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வசீம் கான் வீடியோ முறையிலான மாநாடு ஒன்றில் தெரிவித்தார்.    

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா 

கராச்சி, லாகூர் மற்றும் பெஷாவரில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கொவிட்-19 இற்காக மேற்கொள்ளப்பட்ட 35 சோதனைகளில் இந்த ஏழு வீரர்கள் தவிர்த்து, பயிற்சி உதவியாளர் ஒருவருக்கும் நோய்த் தொற்று எற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.      

இந்த அறிக்கை வெளியாகும் வரையான காலத்தில் சொஹைப் மலிக், களைப் டிகோன் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் சோதனை செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பித்தக்கது

இதில் ஆபித் அலி, அசாத் சபீக், அசார் அலி, பாபர் அஸாம், பாஹித் அஷ்ரப், பவாத் அலாம், இப்திகார் அஹமட், இமாமுல் ஹக், குஷ்தில் ஷாஹ், மொஹமட் அப்பாஸ், நயீம் ஷா, சர்ப்ராஸ் அஹமட், ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், சொஹைல் கான் மற்றும் யாசிர் ஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று சோதனை முடிவுகள் காட்டியுள்ளனஎன்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.     

தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் அவரது உதவியாளர் ஷஹீட் அஸ்லம் மற்றும் துடுப்பாட்ட பயிற்சியாளர் யூனிஸ் கான் உட்பட பயிற்சியாளர்களுக்கு நோய்ப் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது

முன்னதாக சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான், வேகப் பந்துவீச்சாளர் ஹரிஸ் ரவுப் மற்றும் பதின்ம வயது துடுப்பாட்ட வீரர் ஹைதர் அலி ஆகியோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடந்த திங்கட்கிழமை (22) அறிவித்திருந்தது. எனினும் இவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படாத நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 29 பேர் கொண்ட குழாத்தை பாகிஸ்தான் அறிவித்திருக்குக்கும் நிலையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான வீரர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.   

இந்நிலையில் நோய்த் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட வீரர்கள் ஜூன் 24 ஆம் திகதி லாகூருக்கு அழைக்கப்படவிருப்பதோடு ஜூன் 28 இல் சுற்றுப்பயணத்திற்காக புறப்பட்டு செல்லவுள்ளனர். இவர்கள் மீதான மருத்துவ சோதனைக்குப் பின்னர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை மூலம் வழங்கப்படும் பாதுகாப்பான வளாகம் ஒன்றில் பயிற்சி பெறவுள்ளனர்.   

இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஏற்பாடாகி இருப்பதோடு திட்டமிட்ட அட்டவணையில் அணி புறப்பட்டுச் செல்லும் என்று வசீம் கான் குறிப்பிட்டார்.  

எனினும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட வீரர்கள் சுற்றுப்பயணத்தில் இருந்து இன்னும் நீக்கப்படவில்லை. அவர்கள் குணமடைந்ததும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதோடு மற்றொரு மருத்துவ சோதனைக்கு முகம்கொடுப்பார்கள். எனினும் முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஐந்து மருத்துவ சோதனைகளுக்கு வீரர்கள் முகம்கொடுக்கவிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது.  

பாகிஸ்தான் அணி வரும் ஜூலை 30 ஆம் திகதி இங்கிலாந்துக்கு எதிராக லோட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவிருப்பதோடு தொடர்ந்து மன்செஸ்டர் மற்றும் நொட்டின்ஹாமில் அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெறும்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<