செரண்டிப், நியூ ஸ்டாருக்கு மீண்டும் வெற்றி; பிரகாசிக்க தவறிய சோண்டர்ஸ்

377

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 5ஆம் வாரத்திற்கான போட்டிகளில் கடந்த வாரம் வெற்றிகளைத் தவறவிட்ட செரண்டிப் கழகமும், நியூ ஸ்டார் கழகமும்  இந்த வாரம் வெற்றிகளை பெற்றன. மறுமுனையில் சோண்டர்ஸ் அணி இந்த வாரம் சோபிக்க  தவறியது.

செரண்டிப் கா.க எதிர் நிகம்பு யூத் கா.க

சனிக்கிழமை குருநாகல் மலிகாபிடிய மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் செரண்டிப் அணி 5-2 என   நிகம்பூ யூத் அணியை வீழ்த்தியது. அவ்வணிக்காக மொஹமட் பயாஸ் போட்டியின் 4ஆவது நிமிடத்தில் முதல் கோலடித்தார்.

38ஆவது நிமிடத்தில் செரண்டிப் அணியின் அசண்டே எவன்ஸ் அடித்த பெனால்டி உதையை எதிரணியின் கோல் காப்பாளர் கணேஷ் கிரிஷாந்த தடுத்தாலும், திரும்பி வந்த பந்தை ஒபொரி ஜோர்ஜ் (Ofori George) கோலாக்கினார். நிகம்பூ யூத்  அணியின் அந்தோணி இக்வேபோ (Anthony Ikwegbuo) 50ஆவது நிமிடத்தில் கோலடித்து  போட்டியின் கோல் எண்ணிக்கையை 2-1 என மாற்றினார்.

எனினும் 66ஆவது நிமிடத்தில் அசண்டே எவன்ஸ் செரண்டிப் அணிக்காகக் கோலடித்து அவ்வணியை மேலும் முன்னிலை படுத்தினார்.  தொடர்ந்து செரண்டிப் அணியின் தலைவர் ரியாஸ் மொஹமட் 78ஆவது நிமிடத்தில் அபார கோல் ஒன்றினை அடிக்க, 80ஆவது நிமிடத்தில் எவன்ஸ் செரண்டிப் அணியின் 5ஆவது கோலை அடித்தார். கிறிஸ்ட்டின் பெர்னாண்டோ 90+1ஆவது நிமிடத்தில்  நிகம்பு யூத் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கி அவ்வணிக்காக ஆறுதல் கோலை அடித்தார்.

முழு நேரம்: செரண்டிப் கா.க 5 – 2 நிகம்பு யூத் கா.க

நியூ ஸ்டார் வி.க எதிர் மொறகஸ்முல்ல வி.க

சுகததாச அரங்கில் 2ஆம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய  நியூ ஸ்டார் கழகம், மொரகஸ்முல்ல அணிக்கெதிராக 4-1 என வெற்றியை பதிவு செய்தது. 4ஆவது நிமிடத்தில் போட்டியின் முதலாவது கோலை மொறகஸ்முல்ல அணிக்காக புபுது சகுலத அடித்தாலும், 7 ஆம் நிமிடத்தில் நியூ ஸ்டார் அணிக்காக மொஹமட் சாகிர் ஒரு கோலடித்து அதை சமப்படுத்தினார்.

முதலாம் பாதி நிறைவுக்கு சற்று முன்னர் மொஹமட் அனஸ் நியூ ஸ்டார் அணிக்காக ஒரு கோலடித்து அவ்வணியை 2-1 என முன்னிலை படுத்தினார். தொடர்ந்து 78ஆவது நிமிடத்தில் மாற்று வீரர் மொஹமட் அஸ்மின் மற்றும் 81ஆவது நிமிடத்தில் சாகிர் தனது இரண்டாவது கோலையும் அடிக்க, இப்போட்டியை 4-1 என வெற்றி பெற்றது நியூ ஸ்டார்.

முழு நேரம்: நியூ ஸ்டார் வி.க 4 -1 மொறகஸ்முல்ல வி.க

சோண்டர்ஸ் வி.க எதிர் SLTB வி.க

செரண்டிப் அணிக்கெதிராக கடந்த வாரம் பெற்ற அமோக வெற்றிக்கு பின்னர், இவ்வாரம் இடம்பெற்ற போட்டியில் SLTB அணிக்கெதிராக எந்த ஒரு கோலும் அடிக்காமல் ஆட்டத்தை சமன் செய்தது சோண்டர்ஸ் கழகம். காலியில் இடம்பெற்ற இந்த போட்டியில் 71 மற்றும் 76 ஆவது நிமிடங்களில் SLTB அணியின் சண்முகராஜா சனஜீவ் மற்றும் ருவன் சனாக சிவப்பு அட்டைகளை பெற்று வெளியேறிய பின்னர், SLTB அணி,  போட்டியின் இறுதி 20 நிமிடங்களில் வெறும் 9 வீரர்களை வைத்து மாத்திரமே விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: சோண்டர்ஸ் வி.க 0 – 0 SLTB வி.க

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<