போட்டியின் பின்னரான கைகலப்பிற்காக செரண்டிப் கழகம்மீது நடவடிக்கை

463

நாவலப்பிட்டிய ஜயதிலக்க அரங்கில் நடந்த ரெட் ஸ்டார் கால்பந்துக் கழகத்திற்கு எதிரான போட்டியில் மோதல் ஒன்றை ஏற்படுத்திய செரண்டிப் கால்பந்துக் கழகத்திற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் தண்டனை விதித்துள்ளது.  

இந்தப் பருவகால பிரீமியர் லீக், பிரிவு ஒன்றின் சுப்பர் 6 சுற்றுக்கான முதல் வாரப் போட்டியாக ரெட் ஸ்டார் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரட்னம், ரெட் ஸ்டார், திஹாரிய அணிகள் சுபர் சிக்ஸ் முதல் வாரத்தில் வெற்றி

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நாடாத்தப்படும் பிரிவு…

இந்த போட்டியில் ரெட் ஸ்டார் அணி 1–0 என வெற்றி பெற்றது. இதன்போது இறுதி விசில் ஊதப்பட்ட பின் தனது சொந்த மைதானத்தில் தோல்வியடைந்த செரண்டிப் அணியினர் மற்றும் ரசிகர்கள் இருக்கும் பக்கமாக சென்ற ரெட் ஸ்டார் அணியின் மொஹமட் நுஸ்கி தனது மேலாடையை (Jersey) அகற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து செரண்டிப் கால்பந்துக் கழகத்தின் தலைவர் ராஜ் ஷெரோன் மற்றும் அகீல் அக்ரம் ஆகியோர் நுஸ்கியுடன் மோதலில் ஈடுபட்டிருப்பதோடு, ரசிர்களும் இதில் இணைந்ததால் சம்பவம் கைகலப்பாக மாறியுள்ளது. இந்த தகவலை இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) வெளியிட்டுள்ளது.

போட்டியை நடத்தும் கழகங்கள் மைதானத்தின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று இலங்கை கால்பந்து சம்மேளனம் சுப்பர் 6 சுற்றுப் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னர் அறிவுறுத்தியது. இது முறையான தரத்தில் இல்லையென்றால் பொறுப்புடைய கழகம் மீது தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் FFSL மற்றும் போட்டி ஏற்பாட்டுக் குழு நடத்திய விசாரணைக்குப்பின் செரண்டிப் கால்பந்து கழகத்திற்கு ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு அடுத்த அறிவிப்பு வரும்வரை செரண்டிப் அணியின் சொந்த மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மோதலை தூண்டும் வகையில் செயற்பட்ட ரெட் ஸ்டார் அணியின் மொஹமட் நுஸ்கிக்கு இரண்டு போட்டிகளில் தடை  விதிக்கப்பட்டது. ராஜ் ஷெரோனுக்கு 10,000 ரூபாய் அபராதம் மற்றும் இரண்டு போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது. அதேபோன்று அகீல் அக்ரம் மீதும் இரண்டு போட்டிகளில் தடை விதிக்கப்பட்டார்.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க